பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

சேர மன்னர் கொங்கு நாட்டில் கால் ஊன்றுவதைக் கண்ட சோழ அரசரும் பாண்டிய மன்னரும் சும்மா இருக்கவில்லை. சேரருக்கு எதிராக அவர்கள் போர் செய்து சேரரின் ஆதிக்கத்தைத் தடுத்தார்கள். அவர்கள் கொங்குச் சிற்றரசர்களுக்கு உதவியாக இருந்து, சேர அரசரின் ஆதிக்கத்தை எதிர்த்தார்கள். இதன் காரணமாகச் சேர மன்னர் கொங்கு நாட்டை எளிதில் கைப்பற்ற முடியவில்லை. ஆனால், விடா முயற்சியோடு போர் செய்து கொங்கு நாட்டில் சிறிது சிறிதாகச் சேர அரசர் தங்கள் ஆட்சியை நிறுவினார்கள்.

சேர நாட்டு அரசனான உதியஞ் சேரலுக்கு இரண்டு மக்கள் இருந்தார்கள். அவர்கள் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனும் (பதிற்றுப்பத்து 2-ஆம் பத்தின் தலைவன்) பல்யானைச் செல்கெழு குட்டுவனும் (பதிற்றுப்பத்து, 3-ஆம் பத்துத் தலைவன்) ஆவர். இளையனாகிய குட்டுவன் பெரிய யானைப் படையை வைத்திருந்தபடியால் அவன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்று பெயர் பெற்றான். இவன் உம்பற் காட்டையும் (யானை மலைப் பிரதேசம்) அகப்பா என்னும் கோட்டையையும் வென்றான். உம்பற் காட்டை வென்ற இவன் அங்குத் தன் ஆட்சியை நிறுவினான். நிறுவித் தன்னுடைய உறவினரில் முதியவர்களுக்கு அந் நாட்டைப் பிரித்துக் கொடுத்தான். இதை

“உம்பர் காட்டைத் தன்கோல் நிறீஇ
அகப்பா எறிந்து பகல்தீ வேட்டு
மதியுறழ் மரபின் முதியரைத் தழீஇக்
கண்ணகன் வைப்பின் மண்வதத் தீத்து”

என்று பதிற்றுப்பத்து மூன்றாம் பத்துப் பதிகங் கூறுகின்றது. “முதியரை மதியுறழ் மரபிற் றழீஇ மண்வகுத் தீததெனக் கூட்டித், தன் குலத்தில் தனக்கு முதியரை மதியாடொத்த தன் தண்ணிளியால் தழீஇக் கொண்டு அவர்க்குத் தன் நாட்டைப் பகுத்துக் கொடுத்து என உரைக்க” என்பது பழைய உரை.