பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71

புலவருடன் இருந்தபோது, சோழன் முடித்தலைக்கோ பெரு நற்கிள்ளி அவ்வூர் வழியாக யானை மேல் வந்தான். அது கண்ட பெருஞ்சேரல் இரும்பொறை, சோழன் தன்மேல் போருக்கு வருகின்றானோ என்று ஐயங்கொண்டான். அப்போது அருகிலிருந்த சோழனாட்டுப் புலவரான உறையூர் முடமோசியார், சோழன் போருக்கு வரவில்லை என்று கூறி இவனுடைய ஐயத்தை நீக்கினார். (புறம்-13) இந்தச் செய்யுளின் அடிக்குறிப்பு “சோழன் முடித் தலைக்கோப் பெரு நற்கிள்ளி கருவூரிடஞ் செல்வானைக் கண்டு சேரமான் அந்துவஞ் சேரல் இரும்பொறையொடு வேண்மாடத்து மேலிருந்து பாடியது” என்று கூறுகிறது.

அந்துவஞ் சேரல் இரும்பொறையும் கருவூர் ஏறிய ஒள்வாட் பெருஞ்சேரல் இரும்பொறையும் ஒருவரே. இவர்கள் வெவ்வேறு அரசர் என்று கே. ஜி. சேஷ ஐயர் கருதுகிறார்.[1] அவர் கருத்து தவறென்று தோன்றுகிறது.

அந்துவன் பொறையனுடைய அரசியின் பெயர் பொறையன் பெருந்தேவி என்பது. அவள் ஒரு தந்தை என்பவனின் மகள். இவர்களுக்குப் பிறந்த மகன் செல்வக் கடுங்கோ வாழியாதன். இதனை,

"

மடியா வுள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த
நெடுநுண் கேள்வி யந்துவற்கு ஒருதந்தை
யீன்றமகள் பொறையன் பெருந்தேவி யீன்றமகன்

... ... ...


செல்வக் கடுங்கோ வாழியாதன்”

என்னும் 7-ஆம் பத்துப் பதிகத்தினால் அறிகிறோம்.

(இதன் பதிகத்து ஒருதந்தை யென்றது பொறையன் பெருந்தேவியின் பிதாவுடைய பெயரி' என்று பழைய உரை)


  1. P.36. Cera kings of the Sangam Period K.G. Sesha Aiyer,1937.)