பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77

இவன் அவ்வெற்றிகளுக்கு அறிகுறியாக வேள்விகளைச் செய்தான்.

செ. க. வா. ஆதனின் கொங்கு இராச்சியம் கொங்கு நாட்டின் தென்பகுதியில் மட்டும் இருந்தது. இவனுடைய இராச்சியத்தின் வடக்கிலிருந்த கொல்லிக் கூற்றம், தகடூர் முதலிய நாடுகளை இவன் வெல்லவில்லை. அவற்றை வென்று சேர்த்துக் கொண்டவன் இவனுடைய மகனான பெருஞ்சேரல் இரும்பொறையாவான்.

செல்வக் கடுங்கோ வாழி ஆதன், ஆவிநாடு என்றும் வையாவி நாடு என்றும் பெயர் பெற்றிருந்த (இப்போதைய பழநிமலை வட்டாரம்) நாட்டின் சிற்றரசனாகிய வேள் ஆவிக் கோமான் பதுமன் என்பவனுடைய பெண்களில் ஒருத்தியைத் திருமணஞ் செய்து கொண்டு வாழ்ந்தான். இவ்வரசியின் பெயர் வேள் ஆவிக்கோமான் பதுமன் தேவி என்பது.[1] இந்த அரசியின் தமக்கையை இவனுடைய தாயாதித் தமயனான சேரலாதன் (இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன்) மணஞ்செய்திருந்தான். அந்த அரசிக்கும் ‘வேள் ஆவிக்கோமான் பதுமன் தேவி’ என்று பெயர் இருந்தது.[2] எனவே செ.க.வா. ஆதனும் நெடுஞ்சேரலாதனும் சமகாலத்தில் முறையே கொங்கு நாட்டையும் சேர நாட்டையும் அரசாண்டனர் என்று தெரிகின்றது. இவர்களுக்குப் பெண் கொடுத்த மாமனாராகிய வேள் ஆவிக் கோமான் பதுமன், பொதினி என்னும் வையாவி நாட்டையாண்ட சிற்றரசன் என்று கூறினோம். அந்த வையாவி நாடு அக்காலத்தில் கொங்குநாட்டின் தென் கோடியில் இருந்தது. இக்காலத்தில் அது பழனி என்னும்


  1. (8ஆம் பத்து, பதிகம் அடி 1-2
  2. (4ஆம் பத்து, பதிகம் அடி 1-3)