பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

செலவுக்கென்று நூறாயிரங்காணம் (ஒரு லட்சம் பொற்காசு) கொடுத்து, கொங்கு நாட்டிலுள்ள நன்று என்னும் மலைமேல் ஏறி நின்று அங்கிருந்து காணப்பட்ட நாடுகளின் வருவாயை அவருக்குக் கொடுத்தான்.[1]

செ. க. வா. ஆதனுடைய பேரனான இளஞ்சேரல் இரும் பொறையை ஒன்பதாம் பத்தில் பாடிய பெருங்குன்றூர் கிழார். செ. க. வா. ஆதன் நாடு காண் நெடுவரை மேல் இருந்து கபிலருக்குக் காட்டிக் கொடுத்து நாடுகளைப் பற்றித் தம்முடைய செய்யுளில் குறிப்பிட்டுள்ளார்.

“கோடுபல விரிந்த நாடுகாண் நெடுவரைச்
சூடா நறவின் நாண்மகிழ் இருக்கை
அரசவை பணிய அறம்புரிந்து வயங்கிய
மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின்
உவலை கூராக் கவலையில் நெஞ்சின்
நனவிற் பாடிய நல்லிசைக்
கபிலன் பெற்ற ஊரினும் பலவே”
(9 ஆம் பத்து -5:7-13)

பொறையன் மரபைச் சேர்ந்த இந்தச் செல்வக் கடுங்கோவுக்கு மாந்தரங் கடுங்கோ என்ற பெயரும் வழங்கி வந்தது என்பது தெரிகிறது. இவன் காலத்தவராகிய பரணர் தம் முடைய செய்யுள் ஒன்றில் இப்பெயரையும் இவனுடைய வள்ளன்மையையுங் கூறுகிறார்.

“இலவ மலரன்ன அஞ்செந் நாவில்
புலமீக்கூறும் புரையோர் ஏத்தப்
பலர்மேந் தொன்றிய கவிகை வள்ளல்
நிறையருந் தானை வெல்போர் மாந்தரம்
பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற
குறையோர் கொள்கலம் போல நன்றும்
உவவினி வாழிய நெஞ்சே .” (அகம்,142:1-7)


  1. “சிறுபுறமென நூறாயிரங்காணங் கொடுத்து நின்றா
    வென்னுங் குன்றேறி நின்று தன் கண்ணிற் கண்ட
    நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் அக்கோ”
    (7 ஆம் பத்துப் பதிகத்தின் அடிக்குறிப்பு).