பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறிவுரை கூறினார். சிறுவர்கள் இருவரும் மௌனமாக வெவ்வேறு அறைக்குள் சென்றுவிட்டார்கள். தங்கமணியின் தோளிலிருந்து இறங்கி மேஜையின் மேல் உட்கார்ந்திருந்த ஜின்கா அவனை உற்றுப் பார்த்தது. அவன் அதைக் கூப்பிடாமலேயே சென்றுவிட்டான். ஜின்கா கொஞ்சம் நேரம் யோசனை செய்துவிட்டு, வடிவேலைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே தங்கமணி இருந்த அறைக்குள் நுழைந்தது. கண்ணகி மெதுவாகச் சமையல் அறைக்குள் நழுவிவிட்டாள்.

தங்கமணி ஒரு மூலையில் சோர்ந்த முகத்தோடு அமர்ந்திருந்தான். ஜின்கா அவன் கன்னத்தைத் தடவிக் கொடுத்து விட்டு, அவன் மடியில் பேசாமல் படுத்துக்கொண்டது.

நாய்க்குட்டி, முயற்குட்டி இப்படி ஏதாவது ஒன்றைத் தங்கமணி சிறுவயது முதற்கொண்டு பிரியமாக வளர்த்து வந்தான். அவன் தாயார் வள்ளிநாயகிக்கு இது சில சமயங்களில் தொந்தரவாக இருக்கும். இருந்தாலும் அவன் ஏதாவதொன்றைச் செல்லமாக வளர்ப்பதை விடவில்லை. ஒரு சமயம் அடையாற்றிலே பெரிய வெள்ளம் வந்தது. அதைப் பார்ப்பதற்காகத் தங்கமணி சென்றிருந்தான். அந்த வெள்ளத்திலே ஒரு குரங்குக்குட்டி அகப்பட்டுத் தத்தளித்து மிதந்து வந்து கொண்டிருந்தது. நல்ல வேளையாகத் தங்கமணி நிற்கும் இடத்திலே அது கரையோரமாக வரவே, அவன் இடுப்பளவு வெள்ளத்தில் இறங்கி, அதைக் காப்பாற்றி, வீட்டிற்கு எடுத்து வந்தான். அதுமுதல் தங்கமணி அந்தக் குரங்கு ஒன்றையே மிக அன்போடு வளர்க்கலானான். அது அவனுக்கு முன்னால் 'ஜிங் ஜிங்' என்று குதித்து விளையாடும். அதனால் அதற்கு ‘ஜின்கா' என்று அவன் பெயர் வைத்தான். அவன் சொல்லுவதையெல்லாம் கேட்டு அதன்படி நடக்கவும் அதைப் பழக்கி வைத்தான். ஜின்கா அவனிடத்தில் தனிப்பட்ட அன்பு கொண்டிருந்தது. அவன்தானே அதன் உயிரைக் காப்பாற்றினான்? பள்ளிக்கூட நேரம் தவிர, அது மற்ற நேரங்களில் அவனோடேயே இருக்கும். இரவில் தூங்கும் போதும் அவனுடைய படுக்கையிலேயே படுத்திருக்கும்.

வடிவேல் தங்கமணியை ஏதோ கடிந்து சொல்லிவிட்டதாக அதற்குப் புலப்பட்டது, அதனால் அது இப்பொழுது தங்க