பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

இவர்கள் போடுகின்ற சத்தத்தைக் கேட்டு வள்ளிநாயகி, அவர்கள் குதூகலத்திற்குக் காரணம் என்ன என்று அறிந்து கொள்ள அங்கே வந்து சேர்ந்தாள். எப்பொழுது புறப்படுவது, என்ன சாமான்கள் எல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் வடிவேல் சிறுவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். வள்ளி நாயகியைக் கண்டதும், விடைத்தாள்களையெல்லாம் நேற்று இரவே திருத்தி முடிந்தது. எனக்குக் கொஞ்சம் ஓய்வு வேண்டும். குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்" என்று அவர் சொன்னார்.

“எத்தனை நாளைக்குத் திருவிழா?” இது வள்ளி நாயகியின் கேள்வி.

"திருவிழா பத்து நாள்கள் நடக்கும். வஞ்சியூர் என்ற கிராமம் கொல்லிமலைக்கு அருகிலே இருக்கிறது. அங்கேயே பத்து நாள்களும் தங்குவோம். இங்கிருந்தால் சென்ற ஆண்டைப் போல இப்பவும் மார்க்குக்கு அலையும் உத்தமர்கள் தொல்லை இருக்கும். நாம் போகும் இடமும் யாருக்கும் தெரியக்கூடாது" என்று தம் மனைவிக்கு அவர் விளக்கம் கூறினார்.

எதிர்பாராமல் இந்தப் பயணம் ஏற்பட்டதைக் கண்டு எல்லாருக்கும் பெருமகிழ்ச்சி. "டேய் ஜின்கா, உன்னுடைய குரங்குவேலையை அங்கே காண்பிக்கலாம். மரங்கள் ஏராளமாக இருக்கும்" என்று தட்டிக் கொடுத்தான் சுந்தரம். இரவில் அவர்களுக்கு உறக்கமே வரவில்லை. "அண்ணா , அங்கே ஆறு இருக்குமா? அதிலே எனக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பாயா?" என்று கேட்டாள் கண்ணகி. "நான் வட்டத் தோணியிலே துடுப்புப் போடப் போகிறேன்" என்று சுந்தரம், பரிசல் தள்ளத் தெரிந்தவன் போலக் கூறினான். "நான் அந்தக் குள்ளனைக் கண்டுபிடிக்கப் போகிறேன்" என்று தங்கமணி துப்பறியும் வேலையில் தனக்குள்ள ஆர்வத்தைக் காட்டினான். "மாமா, துப்பறியும் நாவல்தான் படிக்கிறார். நீ, துப்பறியும் சாம்புவே ஆகிவிட்டாய்" என்று கேலி செய்தான் சுந்தரம். இவர்களுடைய உற்சாகத்தைக் கண்டு ஜின்கா, எதையோ புரிந்துகொண்டது போலப் படுக்கையின்