மறுநாள் காலையில் எல்லாரும் அங்காளம்மன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்துவந்தார்கள். பிறகு, காலை உணவை அதிவிரைவில் உண்டதும் தங்கமணி, சுந்தரம் ஆகிய இருவரும் கண்ணகியை அழைத்துக்கொண்டு திருவிழாக் கடைவீதிகளையும் மற்ற வேடிக்கைகளையும் பார்க்கச் சென்றார்கள். ஜின்கா தங்கமணி தோளின் மேல் அமர்ந்து கொண்டு கூட்டத்தில் வந்ததே அங்கு கூடியிருந்த மக்களுக்கு ஒரு விநோதக் காட்சியாக இருந்தது. அப்படி இவர்கள் சென்றுகொண்டிருந்த சமயத்தில்தான் வீர்சிங்கை எதிர்பாராத விதமாகச் சந்தித்தார்கள். வீர்சிங்கும் அவர்களைப் பார்த்துக் கொஞ்ச நேரம் திகைத்து நின்றுவிட்டார். பிறகு அவர் "தங்கமணி, நீங்க எங்கே வந்தாங்கோ? அப்பா எங்கே?" என்று கேட்டார். தங்கமணி உடனே, “நாங்கள் திருவிழாப் பார்க்க வந்தோம்" என்று பதில் சொன்னான். "கோடை விடுமுறையாதலால் எங்காவது கிராமத்துக்கு அழைத்துக்கொண்டு போகும்படி நான்தான் மாமாவைத் தொந்தரவு செய்தேன். இங்கு திருவிழா நடப்பதைக் கேள்விப் பட்டு எங்களை இங்கே அழைத்து வந்தார்" என்று கூறினான் சுந்தரம். "அச்சா அச்சா, உங்களுக்கு ஆத்திலே படகு சவாரி பண்றான் இல்லை? ரொம்ப ஜோர், வாங்கோ" என்றார் வீர்சிங்.
“அண்ணா, எனக்கு நீந்தக் கற்றுக்கொடுக்க வேண்டும்" என்று கண்ணகி தன் ஆவலை மீண்டும் வெளியிட்டாள். தங்கமணியும் சுந்தரமும் ஆற்றிலே நீந்துவதற்குத் துடித்துக் கொண்டிருந்தார்கள். “இங்கே ஆறு எந்தப் பக்கத்திலே இருக்கிறது?" என்று இரண்டு பேரும் பரபரப்போடு கேட்டார்கள்.
“நம்மளுக்குத் தெரியும், வாங்கோ. ரொம்ப ஜோரான ஆறு. அதில் நீச்சல் போடலாம். படகு சவாரி செய்ராங்கோ. வாங்க, உங்க அப்பாவைப் பார்க்கலாம்" என்று கூறினார் வீர்சிங். சிறுவர்கள் அவரை ஆவலோடு சத்திரத்தில் இருந்த வடிவேலிடம் அழைத்துச் சென்றார்கள்.