பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
31

"காயமெல்லாம் ஒன்றும் பிரமாதமில்லை. குழந்தைகள் எல்லாம் கொல்லிமலைக் காட்சிகளைக் காணப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பேராசிரியர் வடிவேல் அங்கே போய்ப் பார்க்க விரும்பினார். அவரை என் காரிலேயே அனுப்பி வைப்பதாகச் சொன்னேன். நீங்கள் எங்காவது வெளியிலே கோயிலுக்கோ மற்ற இடங்களுக்கோ செல்வதற்காக உங்கள் கார் இங்கேயே இருக்கட்டும் என்று அவர் தெரிவித்தார். குழந்தைகளும் அவரும் மாலை ஏழு எட்டு மணி சுமாருக்குத் திரும்பிவிடுவார்கள். இரவு உணவுக்கு இங்கேயே வருவதாகச் சொல்லச் சொன்னார்கள்" என்று ஆங்கிலத்திலேயே தெரிவித்துவிட்டு அவன் புறப்பட்டான்.

குள்ளனுடைய சூழ்ச்சி நல்ல பலன் அளித்தது. வள்ளிநாயகி அவன் கூறுவதை உண்மையென நம்பிக் கவலையின்றி இருந்தாள். கொல்லிமலைக் காட்சிகளைக் காணத் தன்னையும் ஏன் அழைத்துச் செல்லவில்லை என்ற ஐயம் அவளுக்கு அப்பொழுது ஏற்படவில்லை.


7

ரிசலிலிருந்து ஆற்று வெள்ளத்தில் குதித்த ஜின்கா உற்சாகமாகக் கரையை நோக்கி நீந்தியது. இருட்டாக இருந்தும் அது விரைவிலே மறு கரையை அடைந்துவிட்டது. பிறகு, அது சற்றும் நின்று பாராமல் சத்திரத்தை நோக்கித் தாவிச்சென்றது. வடிவேலையும் குழந்தைகளையும் எதிர் பார்த்த விதமாக வள்ளிநாயகி வெளித் திண்ணையிலே அமர்ந்திருந்தாள். ஜின்கா மட்டும் தனியாக அங்கே வருவதைக் கண்டு அவளுக்கு ஒருவகை அச்சமேற்பட்டது. அவள் அறைக்குள்ளே ஜின்காவை அழைத்துக்கொண்டு சென்றாள். கற்றாழை மடலில் எழுதியிருந்த கடிதத்தைக் கண்டாள். அவளுக்கு விஷயமெல்லாம் புரிந்துவிட்டது. கொல்லிமலைக் குள்ளன் பேராசிரியர் வடிவேலையும் சேர்த்து ஏமாற்றி விட்டதையும், அவரையும் குழந்தைகளையும் வஞ்சகமாகத் தன் வசப்படுத்தியிருப்பதையும் அறிந்து துடித்தாள்.