பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

வள்ளிநாயகியையும் சூழ்ச்சியால் கைப்பற்றி எங்காவது ஓர் இடத்திற்குக் கொண்டுபோய் வைத்துவிடலாமா என்றும் அவன் நினைத்துப் பார்த்தான். ஆனால், அவளை அப்படிப் பிடித்து வைக்க வேண்டிய அவசியம் இல்லையென்றும் அவனுக்குத் தோன்றியது. வடிவேலும் குழந்தைகளும் வராததற்கு ஏதாவது தகுந்த காரணம் ஒன்றைச் சொல்லிவிட்டால் அவன் திருப்தியடைந்துவிடுவாள். எதற்காக அவளையும் பிடித்து வைக்க வேண்டும்? அவளை நம்பும்படி செய்வது எளிது என்று குள்ளன் கருதினான். அதற்கான திட்டமொன்றை மனத்தில் உருவாக்கிக்கொண்டு சத்திரத்தை நோக்கிப் புறப்பட்டான். அங்கே வள்ளிநாயகி இல்லாதிருந்தது முதலில் அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. பிறகு, அவன் மனத்தைச் சமாதானப்படுத்திக்கொண்டு சமையற்காரப் பையனிடம், "பேராசிரியர் கொல்லிமலையின் இடையிலே ஓடும் வஞ்சியாற்றின் வழியாகப் பரிசலில் சென்று பார்க்க வேண்டுமென்று சொன்னார். அதற்கு நான் ஏற்பாடு செய்து கொடுத்தேன். மாலை நேரத்தில் புறப்படும் போது சுற்றியுள்ள காட்சி மிக அழகாக இருந்தது. அதையெல்லாம் பார்க்கவேண்டுமென்று குழந்தைகள் மிகவும் பிரியப்பட்டார்கள். அதனால் அவர்களையும் பேராசிரியர் கூடவே அழைத்துச் சென்றிருக்கிறார். ஆற்று வழியாகக் கூடல் பட்டணம் வரை சென்றுவிட்டு, வர மூன்று நாள்களாகுமாம். அதுவரை அம்மாளையும் உன்னையும் இங்கேயே இருக்கும்படி தெரிவிக்கும்படி என்னிடம் சொன்னார். கொல்லிமலைச் சாரலிலிருந்து திரும்பி இங்கு வந்துவிட்டுப் போக நேரமில்லை. இதை அம்மாளிடம் சொல்லிவிடு" என்று அவன் சொன்னான்.

இப்படிக் கூறியதோடு அவன் திரும்பிப் போய்விடவில்லை. "மூன்று நாளைக்கு எல்லோருக்கும் வேண்டிய துணி மணிகளை வாங்கி வரும்படி என்னிடம் சொன்னார். இப்பொழுது அவை வேண்டும். நான் மற்றொரு பரிசலிலே அவற்றை அனுப்ப வேண்டும்! மிகவும் அவசரம்" என்று அவன் சொன்னான். அவன் வார்த்தையை நம்பிச் சமையற்காரப் பையனும் வேண்டிய துணிமணிகளை ஒரு சிறிய தோல் பெட்டியில் வைத்துக் கொடுத்தான். அதை வாங்கிக்கொண்டு