41
வெள்ளத்தின் வேகத்தை மீறிக்கொண்டு இரண்டு பரிசல்களும் சென்றன.
தாழிவயிறனையும் அவனுடன் வந்த இருவரையும் போலீஸ்காரர்கள் மாறிமாறிப் பல கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தனர். அவர்களுடைய எசமான் மரப் பொம்மைகள் செய்து அவற்றிற்கு வர்ண அலங்காரங்கள் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றவர் என்றும், திருட்டு வேலைக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லையென்றும் அவர்கள் கூறினார்கள். அவர்கள் பொய் பேசவில்லை யென்பதும் புலனாயிற்று. அதனால் போலீஸ்காரர்களுக்குக் கொல்லிமலைக் குள்ளன் திருடனே அல்லவென்று தோன்றிற்று.
"அண்ணா, வரவர ஆற்றின் இரைச்சல் அதிகமாகிறதே! முன்னால் ஏதாவது நீர் வீழ்ச்சி இருக்குமோ?" என்று கண்ணகி அச்சத்தோடு கேட்டாள். அவள் உடம்பெல்லாம் நடுங்கிற்று.
துடுப்பு வலித்துக்கொண்டே தங்கமணி அவளுக்குத் தைரியம் சொல்லலானான். "நீர்வீழ்ச்சியாக இருக்காது. இருந்தால் அதன் ஓசை வேறு விதமாக இருக்கும். பயப்பட வேண்டாம்" என்று அவன் அந்த ஆற்றின் பகுதியெல்லாம் நன்கு அறிந்தவன்போலச் சொன்னான்.
"ஆற்று வெள்ளம் பாறைகளின்மேல் மோதுவதால் இந்த இரைச்சல் உண்டாவது போலத் தோன்றுகிறது” என்று சுந்தரம் தன் கருத்தை வெளியிட்டான்.
பரிசலைக் கரையோரமாகச் செலுத்தும் முயற்சியில் இரண்டு பேரும் தீவிரமாக ஈடுபட்டார்கள். ஆற்றின் இரைச்சல் அதிகரித்துக்கொண்டேயிருந்தது.
ஓர் இடத்திலே ஆறு புதிதாகக் கரை புரண்டு கரைப் பகுதியிலும் புகுந்து மண்ணை அரித்துக்கொண்டு ஓடியிருப்பது போலத் தென்பட்டது. புதிய வெள்ளம் ஆற்றிலே வந்த