பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

போது இது ஏற்பட்டிருக்க வேண்டும். அதனால் அங்கே பல மரங்கள் வேரோடு பறிக்கப்பட்டு வெள்ளத்தில் போயிருக்கலாமென்றும் தெரிந்தது. ஏனெனில், சுற்றிலும் கரையோரத்தில் மரங்கள் அடர்ந்து ஒரே இருட்டாக இருக்க, இந்தப் பகுதி மட்டும் மரங்களின்றி இருந்தது. அங்கே ஒரு மரம் மட்டும் இன்னும் வெள்ளத்தில் போகவில்லை; ஆனால், தலைசாய்ந்து பாதி விழுந்து சாய்ந்த நிலையிலே இருந்தது. அதன் கிளையொன்று ஆற்றிற்குள்ளே நீளமாக நீண்டிருந்தது. அதன் பக்கமாகப் பரிசல் செல்லவே தங்கமணிக்குத் திடீரென்று ஒரு யோசனை உண்டாயிற்று. பரிசலைக் கட்டி வைப்பதற்காகப் பயன்படும் கயிற்றை அவன் எடுத்து வந்திருந்தானல்லவா? அந்தக் கயிறு இப்போது பயன்படும் என்று கருதினான். அதை எடுத்து ஒரு நுனியை இடக்கையில் பிடித்துக்கொண்டு மற்றொரு நுனியை வலக்கையால் பற்றி ஆற்றுவெள்ளத்திற்கு மேலே தென்பட்ட மரக்கிளைக்கு மேலே போகுமாறு வேகமாக வீசிவிட்டான். கயிறு மரக் கிளைக்கு மேலாகச் சென்று, அதன் மறு பக்கத்திலே நீரில் விழலாயிற்று. அதற்குள் பரிசலும் மரக்கிளையின் அடியிலே புகுந்து மறுபக்கம் வந்தது. உடனே தங்கமணி தான் வீசிவிட்ட கயிற்று நுனியையும் எட்டிப் பிடித்துக்கொண்டான். இப்பொழுது கயிற்றின் இரு நுனிகளும் அவன் கையில் இருக்கவே, பரிசல் மேற்கொண்டு ஆற்றில் போகாமல் ஓரிடத்திலேயே நின்றுவிட்டது.

சுந்தரத்திற்கும் இப்பொழுது தங்கமணியின் எண்ணம் புரிந்துவிட்டது. துடுப்பைப் பரிசலுக்குள்ளே போட்டுவிட்டு அவனும் கயிற்றைக் கெட்டியாகப் பிடித்தான். அதனால் ஆற்றுவெள்ளம் இழுத்தபோதிலும் பரிசல் ஒரே இடத்தில் மிதக்கலாயிற்று. ஆனால், சாய்ந்து விழுந்திருந்த மரமும் அதன் கிளையும் ஆட்டம் கொடுக்கத் தொடங்கிற்று. ஆற்று வெள்ளம் அடிமரத்தின் கீழே மண்ணை ஆழமாகப் பறித்திருந்த படியால் மரம் உறுதியாக நிற்கவில்லை.

"சுந்தரம், இந்த மரம் எவ்வளவு நேரம் தாக்குப்பிடித்து நிற்கிறதோ அது வரையில் நமக்குக் கவலை இல்லை” என்று தங்கமணி சிறிது உற்சாகத்தோடு கூறினான்.