பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
47

அந்த எண்ணம் தொந்தரவு இல்லாமல் நிறைவேறியது தான் தாமதம், பரிசலும் ஆற்றோடு செல்ல ஆரம்பித்துவிட்டது. மரமும் பின்னாலேயே நிலை பெயர்ந்து புரண்டு வீழ்ந்து வரலாயிற்று. அதன் கிளைகளில் அகப்படாமல் தப்பவேண்டுமானால் பரிசலைச்சற்று வேகமாக முன்னால் செலுத்துவது நல்லதென்று தங்கமணிக்குத் தோன்றிற்று. அதனால், அவன் வேகமாகத் துடுப்பை வலிக்கலானான். ஆனால், அந்த இடத்திலே ஆறு சுழித்துக்கொண்டு ஓடிற்று. இவர்கள் எதிர்பாராத விதமாக அந்தச் சுழிப்பு கரையை நோக்கியே சென்றதால் எல்லாம் அனுகூலமாக முடிந்தது.

"இனி மரத்தைப்பற்றிக் கவலையில்லை" என்றான் தங்கமணி.

"கரையில் காலெடுத்து வைக்க வேண்டும். அதற்குப் பரிசலை இன்னும் சற்று கரை அருகில் செலுத்த முயல வேண்டும். அது தான் இனி நமக்கு வேலை. ஒன்று போனால் மற்றொன்று வருகிறது. 'வால் போச்சு, கத்தி வந்தது, டும்டும்' என்று சுந்தரம் நகைத்தான். இந்தச் சமயத்திலே கண்ணகி விழித்துக்கொண்டாள். “அண்ணா, கோயிலிலே மத்தளம் அடிக்கிறதா ?" என்று கண்ணைப் பிசைந்து கொண்டே கேட்டாள். அவளுக்கு வஞ்சியூர்ச் சத்திரத்திலே படுத்திருப்பதாக நினைப்பு. “ஆமாம், தேர் புறப்பட்டுவிட்டது. அம்பாள் எழுந்தருள வேண்டியது தான் பாக்கி" என்று கேலி செய்தான் சுந்தரம். அப்பொழுது தான் கண்ணகிக்கு நிலைமை புலனாயிற்று.

"அண்ணா, இன்னும் கரைக்கு வந்து சேரவில்லையா? பொழுதுகூட விடிந்துவிடும் போலிருக்கிறதே!" என்று அவள் எழுந்து உட்கார்ந்து கவலையோடு கேட்டாள். கொட்டாவி விட்டுக்கொண்டு கிழக்குப் பக்கம் வெளுத்து வருவதை ஆவலோடு கவனித்தாள். அந்தச் சமயத்திலே சுந்தரம் திடீரென்று கை தட்டிக்கொண்டு உற்சாகத்தோடு, "அதோ, அதோ ஜின்கா!" என்று உரத்துக் கூவினான். தங்கமணியும் அவனோடு சேர்ந்து கைதட்டி ஆரவாரம் செய்தான். ஜின்கா வந்து சேர்ந்தது அவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஜின்காவிற்கும் ஒரே குதூகலம். அதுவும் பல