உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

வீறிட்டுக் கத்திவிட்டாள். “அண்ணா, இந்தக் காடு வேண்டவே வேண்டாம். உடனே பரிசலுக்காவது போய் விடலாம்” என்று அவள் அலறினாள்.

“கண்ணகி, பயப்படாதே. எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்தக் காட்டைவிட்டு நாம் வெளியேறிவிடலாம்” என்று தங்கமணி தைரியம் சொல்லிவிட்டு, மலைப்பாம்பு இருக்குமிடத்தைவிட்டு விலகி முன்னால் வேகமாக நடந்தான். சுந்தரமும் கண்ணகியும் அவனுக்குப் பக்கத்திலேயே சென்றார்கள்.

தங்கமணி எதிர்பார்த்தது போல ஒற்றையடிப் பாதையொன்றும் காணப்படவில்லை. ஆனால் ஓரிடத்திலே புதர்களையும் குற்றுச் செடிகளையும் இரண்டு பக்கங்களிலும் மடக்கிவிட்டுக்கொண்டு யாரோ புதிதாக வழி செய்துகொண்டு போயிருப்பதாகத் தெரிந்தது. அந்த வழியைப் பின்பற்றிக் கொண்டு மூவரும் நடந்தார்கள். இவ்வாறு சுமார் அரை மணி நேரம் சென்றிருப்பார்கள். அப்பொழுது யாரோ ஒருவர் ‘அப்பா! அப்பா! ஐயோ ! ஐயோ !’ என்று வேதனையோடு அனத்துவது போலக் கேட்டது. போகப்போக இந்த வேதனைக் குரல் நன்றாகக் கேட்கலாயிற்று. அந்தக் குரல் வரும் திசையை நோக்கித் தங்கமணி வேகமாக நடந்தான். மற்றவர்களும் சந்தேகத்தோடு அவனைத் தொடர்ந்தார்கள்.

ஓர் இடத்திலே மரக்கட்டைகளைக்கொண்டே ஒரு சிறிய வீடு போலக் கட்டப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு எந்தப் பக்கத்திலும் கதவு இருக்கவில்லை. அதன் மேல் பாகத்திலும் கூரை போலப் பெரிய பெரிய மரத்துண்டங்களைப் போட்டுக் கட்டியிருந்தார்கள்; அதற்குள்ளிருந்துதான் யாரோ ஒருவர் அனத்தும் குரல் வெளியே வந்தது. தங்கமணியும் சுந்தரமும் அதைச் சுற்றி ஓடோடிப் பார்த்தார்கள். உள்ளே நுழைய ஒருவழியும் தென்படவில்லை.

உடனே தங்கமணி ஜின்காவை மேலே ஏறும்படி சமிக்கை செய்தான். அதன் கையில் தான் கொண்டுவந்த கயிற்றின் ஒரு நுனியையும் கொடுத்தான். அது பக்கத்திலிருந்த ஒரு மரத்தின்மீது ஏறி, ஒரு கிளைவழியாக வந்து, அந்த மரவீட்டின் கூரைமேல் குதித்தது. குதிப்பதற்கு முன்னால்