68
வைத்து நடத்தார்கள். இப்படி நடப்பதில் ஜின்காவிற்குத் தான் கொண்டாட்டம். ஏனென்றால், அதற்கு இப்படிப்பட்ட வழியெல்லாம் லட்சியமேயில்லை.
இவ்வாறு அவர்கள் சுமார் 500 கஜம் நடந்து சென்றார்கள். அங்கே ஓரிடத்தில் சற்று விசாலமான இடம் இருந்தது. அங்கே மலைப்பகுதியிலே ஒரு வளைவு இருந்தது. அதன் வலப்பக்கத்து மூலையிலே குகை தொடங்கிற்று. குகையின் வாயிலில் இழைத்து வழவழப்பாகாத காட்டு மரப்பலகைகளால் செய்த கதவொன்று இருந்தது. ஆனால், அது குகையோடு பொருத்தப்படவில்லை. அதைக்கொண்டு குகைக் கதவை மூடி, அதன் மத்தியிலே பொருத்தப்பட்ட குறுக்குச் சட்டத்தால் வெளிப் பக்கத்திலிருந்து குறுக்காக மாட்டிவிடலாம். அப்படி மாட்டிவிட்டால் கதவை உள்ளிருந்து திறக்க முடியாது. வெளியிலிருந்து வேண்டுமானால் குறுக்குச் சட்டத்தை நேராக நிமிர்த்திவிட்டுக் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போகலாம். மற்றபடி அதில் பூட்டு ஒன்றும் இல்லை.
மருதாசலம் குறுக்குச் சட்டத்தை நிமிர்த்தி வைத்துக் கதவை ஒரு ஓரமாகத் தள்ளி வைத்தான், எல்லாரும் ஆவலோடும், சற்று அச்சத்தோடும் உள்ளே சென்றனர். உள்ளே ஒரே இருட்டாக இருந்தது. கொஞ்ச நேரமான பிறகு தான் அவர்களால் ஓரளவு உட்புறத்தைப் பார்க்க முடிந்தது.
அது ஒரு விசாலமான குகை. ஆனால், உட்பகுதி ஒழுங்கற்றதாக இருந்தது. பல இடங்களிலே பாறைகள் குறுக்கும் நெடுக்குமாக நீட்டிக்கொண்டிருந்தன. அடித்தளமும் சமனாக இல்லை. பல இடங்களிலே சிறு சிறு குண்டுக் கற்களும், வெவ்வேறு வடிவங்களில் உள்ள பாறைகளும் மேலே துறுத்திக் கொண்டு நின்றன. அந்த இடத்தை ஒழுங்கு செய்ய எவ்வித முயற்சியும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. மலைப்பகுதியிலே இயற்கையாக ஏற்பட்டிருந்த குகை அது. ஓரிடத்திலே சுமார் பத்து அடி உயரத்தில் பாறைக்கு இடையிலே சிறு சிறு பிளவுகள் இருந்தன. அவற்றின் வழியாகச் சூரிய கிரணங்கள் இலேசாக உள்ளே நுழைந்து, மேல்பகுதியில் வெளிச்சத்தை உண்டாக்கின. அந்தப் பிளவுள்ள பகுதி மலைபின் வெளிப்பகுதியாகும். உட்பகுதியிலே ஓரிடத்தில் குகை சற்றே