பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69

உள்ளே செல்லுவது போல இருந்தது. அங்கு ஒரே இருட்டாக இருந்ததாலும், நீர் கசிந்துகொண்டிருந்ததாலும் இவர்கள் அதற்குள்ளே சென்று பார்க்க முடியவில்லை.

“மலை இடுக்கில் அறிக்கொண்டு எங்கிருந்தோ நீர் சொட்டுகிறது. அங்கே வேறொன்றும் இருக்க முடியாது. நானும் அங்கு போய்ப் பார்த்ததில்லை. ஆனால் இதோ, இந்தப் பக்கம் வாருங்கள். இங்கேதான் வேறொரு உட்குகை இருக்கிறது” என்று கூறிக்கொண்டே மருதாசலம் மலையின் உட்பகுதியில் வேறொரு இடத்திற்குச் சென்றான். அங்கே முன்னால் துறுத்திக்கொண்டிருந்த ஒரு கரடுமுரடான கல்லின் மீது லாந்தர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. பக்கத்தில் தீப்பெட்டியும் தயாராக இருந்தது. மருதாசலம் அந்த லாந்தரை ஏற்றினான். அதன் உதவியால் பார்க்கும்போது பக்கத்திலேயே வேறொரு கதவு இருந்தது. இந்தக் கதவிற்கும் பூட்டில்லை. வெளிக்கதவைப் போலவே மத்தியிலே சங்கிலியைக்கொண்டு பிணைக்கப்பட்ட குறுக்குச் சட்டம் இருந்தது. எளிதாகக் கதவைத் திறக்கவும், மூடவும் முடியுமாறு கீல் வைக்கப் பட்டிருந்தது. மருதாசலம் குறுக்குச் சட்டத்தை நிமிர்த்திக் கதவைத் தள்ளினான். கதவு உட்பக்கமாகத் திறந்தது. எல்லாரும் அதற்குள் நுழைந்தனர். மருதாசலம் லாந்தரின் உதவியைக்கொண்டு அந்தக் குகையின் ஒவ்வொரு பகுதியையும் காட்டினான். அங்கேசிறியதும் பெரியதுமாகப் பல செப்புச் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன; அண்மையில் களவுபோன நடராஜர் சிலையும் இருப்பதைக் கண்டு தங்கமணியும் சுந்தரமும் மிகுந்த மகிழ்ச்சிபோடு துள்ளிக் குதித்தார்கள்.

“இது தான் அந்தச்சிலை” என்று சுந்தரம் குதூகலத்தோடு கூவினான். “இதையா கலைக்கூடத்திலிருந்து அந்தக் குள்ளன் திருடிக்கொண்டு வந்துவிட்டான்?” என்று கண்ணகி வியப்போடு கேட்டாள். “இதுவேதான் அந்த உலகப் புகழ்பெற்ற சிலை” என்று தங்கமணி அந்தச் சிலையின் அருகில் உட்கார்ந்து. அதை உற்றுப் பார்த்துக்கொண்டே பதிலளித்தான்.

ஜின்காவிற்குக் கொஞ்ச நேரத்திற்குமேல் அந்த இடம் உற்சாகமளிக்கவில்லை. சிலைகளைப் பார்ப்பதில் அதற்கு அத்தனை ஆவல் இருக்கவில்லை. அது மெதுவாக வெளிக்