பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

குகைக்கு வந்து, அங்கே வெளிச்சம் கொஞ்சமாக உள்ளே வரும் துவாரத்தின் பக்கத்திலே அங்குமிங்குமாகப் பறந்து கொண்டிருந்த துரிஞ்சில்களைப் பார்த்துக்கொண்டிருந்தது. இருட்டிலே குகைகளின் சுவர்களில் மோதாமல் பறக்கும் அவற்றை அது ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டே ஒரு உயரமான கல்லின்மேல் ஏறிப் படுத்துக்கொண்டது. சிலைகளை யெல்லாம் பார்க்கும் அதிசயத்திலே மற்றவர்கள் ஜின்கா வெளிக்குகைக்கு வந்ததைக் கவனிக்கவில்லை. அவர்கள் நாட்டமெல்லாம் சிலைகளின் மேலேயே இருந்தது.

எதிர்பாராத வகையிலே அந்த உட்குகையின் கதவின் அருகிருந்து கொல்லிமலைக் குள்ளனின் கோபச்சிரிப்புக் கேட்டது. “ஆகா, இங்கேயே வந்து அகப்பட்டுக்கொண்டீர்களா? கிடங்கள் உள்ளேயே” என்று கூறிவிட்டு, அவன் உட்குகையின் கதவை மூடிக் குறுக்குச் சட்டத்தை நன்றாகப் பொருத்தி வைத்தான்.

“அண்ணா, அண்ணா, ஏமாந்து போனோம்” என்று கண்ணகி அலறினாள்.


15

கொல்லிமலைக் குள்ளனுக்குத் தன் எண்ணமெல்லாம் எதிர்பாராத விதமாகப் பலித்துவிட்டதென்று பூரிப்பு உண்டாயிற்று. அவன் வாய்விட்டு உரக்கச் சிரித்தான். ஆனால், இந்தப் பூரிப்பும், சிரிப்பும் அடுத்த விநாடியிலேயே மறைந்து விட்டன. அவன் உட்குகையின் கதவை மூடிக் குறுக்குச் சட்டத்தைப் போட்டதை வெளிக்குகையின் ஒரு சுவரோரத்தில் பாறைமீது உட்கார்ந்து துரிஞ்சில்களைக் கவனித்துக் கொண்டிருந்த ஜின்கா பார்த்தது; கண்ணகி அலறியதும் கேட்டது. அதற்கு அடக்க முடியாத கோபம் உண்டாயிற்று. அது ஒரே தாவல் தாவி, குள்ளனின் நெஞ்சின்மீது ஏறி, தலை