பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
17

ங்கமணி, சுந்தரம், கண்ணகி ஆகிய மூவரும் ஆற்றின் மறுகரையில் உள்ள காட்டிலிருந்து தாழிவயிறன் தூங்குகிற சமயத்தில் பரிசலிலே தப்பிப்போன செய்தியறிந்ததும் தாழிவயிறனையும், மற்றொருவனையும் அவர்களைப் பிடிக்க மற்றொரு பரிசலில் குள்ளன் அனுப்பினானல்லவா? அன்றிரவு முழுவதும் அவன், இனிமேல் தான் என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றி யோசனை செய்து. திட்டமிட்டுக்கொண்டிருந்தான். தங்கமணி முதலியவர்களைத் தாழிவயிறன் மீண்டும் பிடித்துவிடுவான் என்று அவன் உறுதியாக நம்பினான். அடுத்த நாள் காலை நேரத்திற்குள் அவர்கள் பிடிபட்ட சேதி தனக்குக் கிடைக்கும் என்றும் எதிர்பார்த்தான். அப்படிச் செய்தி கிடைத்திருந்தால் அந்த நிலைமையில் என்ன செய்வது என்று அவன் முடிவு செய்து வைத்திருந்தான்.

ஆனால், அவன் எதிர்பார்த்தபடி மறு நாள் காலை ஒன்பது மணிவரையிலும் யாதொரு தகவலும் கிடைக்கவில்லை. அதனால் அவன் தனது திட்டத்தையே மாற்றிக்கொள்ள வேண்டியதாயிற்று. இனிமேலும் காலதாமதம் செய்தால் தனக்கு ஆபத்து நேரலாம் என்று அவனுக்குப் பட்டது. அதனால் அவன் வேகமாக எல்லாம் செய்யலானான். தான் கட்டிப்பிடித்து வைத்திருக்கும் பேராசிரியர் வடிவேலையும் பரிசலில் ஏற்றிக்கொண்டு முதலில் வஞ்சியாற்றின் வழியாகத் தச்சுப் பட்டறைக்குப் போக வேண்டுமென்பது அவனது திட்டம். வழியிலே தாழிவயிறனையும், அவன் பிடித்து வைத்திருக்கும் தங்கமணி முதலியவர்களையும் சந்திக்க முடிந்தாலும் அவர்களையும் தச்சுப்பட்டறைக்குக் கொண்டு செல்ல விரும்பினான். பேராசிரியரையும், சிறுவர்களையும் தச்சுப்பட்டறையில் ரகசியமாகப் பூட்டி வைத்துவிட்டு, கொல்லிமலையிலுள்ள ரகசியக் குகைக்குச் சென்று, தான் திருடிய நடராஜர் சிலையை எடுத்துக்கொண்டு முதலில்