பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
83

பஞ்சாபிற்குச் செல்வதென்றும், அங்கிருந்து தரை வழியாகக் காபூல் சென்று, அங்கிருந்து வெளிநாட்டுக்குச் செல்வதென்றும், அந்தச் சிலையை ஏராளமான பணத்திற்கு விற்று விட்டு ரகசியமாக எங்காவது வாழ்வதென்றும் அவன் முடிவு செய்துகொண்டான். தங்கமணி தன்னை யாரென்று கண்டு கொண்டது பெருந்தொல்லையாக இருந்தது. ஆனால், கொலைக் குற்றம் புரிய அவன் அப்பொழுது துணியவில்லை. தான் தப்பிப்போகும் வரையில் அவர்களையெல்லாம் பாதுகாவலில் வைப்பதென்றும், தப்பிய பிறகு இது போன்ற திருட்டுத் தொழிலை நடத்துவதில்லை என்றும் அவன் முடிவு செய்துகொண்டான். இப்போதே அவன் பணம் ஏராளமாக வெளிநாடுகளில் வைத்திருந்தான். நடராஜர் சிலை விற்பதிலும் நிறையப் பணம் கிடைக்கும். அவற்றை வைத்துக்கொண்டு எங்கேயாவது நிம்மதியாக வாழ்வதென்று அவன் எண்ணினான்.

அடுத்த நாள் காலை சுமார் ஒன்பது மணிக்கு மற்றொரு பரிசல் தயாராக, யாருமில்லாத இடத்திலே, வஞ்சியாற்றுக் கரையில் நின்றது. கொல்லிமலைக் குள்ளனின் ஆள்களில் ஐந்து பேர், பேராசிரியர் வடிவேலைப் பரிசலுக்குத் தூக்கி வந்தார்கள். அவருடைய கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன. அவரை அவர்கள் பரிசலில் கிடத்திவிட்டுத் தாங்களும் ஏறிக் கொண்டனர். கொல்லிமலைக் குள்ளன் பிறகு வந்து பரிசலில் ஏறினான். பரிசல் உடனே வேகமாகச் செல்லத் தொடங்கிற்று. அந்த ஆள்கள் ஐந்து பேருக்கும் துடுப்புப் போட நன்கு தெரிந்திருந்தது. அவர்கள் மாறி மாறித் துடுப்புப் போட்டதால் பரிசல் வேகமாகச் சென்றது. குள்ளன் யாரிடமும் பேசவேயில்லை. ஆற்றின் பரப்பையும், கரைகளையும் மட்டும் கூர்ந்து கவனித்து வந்தான், தாழிவயிறனுடைய பரிசல் கண்ணுக்குப் படுமா என்று பார்த்துக்கொண்டிருந்தான். கரையிலே எங்காவது தங்கமணி முதலியவர்களைத் தாழிவயிறன் பிடித்து வைத்திருக்கிறானா என்று தெரிந்துகொள்வதே அவன் நோக்கமாயிருந்தது. ஆனால், அவன் எதிர்பார்த்தபடி அவர்களையோ, பரிசலையோ அங்குக் காண முடியவில்லை. பரிசல் வஞ்சியாற்றின் வழியாக மலைக்கணவாயில் நூலேணி