பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

மறந்துவிட்டு, ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து, தங்கமணியின் தோளில் ஏறிக்கொண்டது.

"கண்ணகி, 'ஜாடிமேலே குரங்கு' என்ற விடுகதை கேட்டிருக்கிறாயா? ஆனால், இங்கே குரங்குமேலே குரங்கு" என்று சுந்தரம் கேலி செய்துகொண்டே நடந்தான்.

தங்கமணிக்கும் கண்ணகிக்கும் தந்தையான வடிவேல் ஒரு தத்துவப் பேராசிரியர். சென்னையில் ஒரு கல்லூரியிலே பணி செய்தார். தங்கமணி பத்தாம் படிவத்திலும், கண்ணகி ஆறாம் படிவத்திலும் படித்தனர். சுந்தரம் வடிவேலுவின் தங்கை மகன் ; ஒன்பதாம் படிவத்தில் மதுரையில் படித்தான்.

அந்த பஞ்சாப்காரர் வடிவேலுடன் ஆங்கிலத்தில் பேசினார். தமது பெயர் வீர்சிங் என்றும், பொம்மைக்கூத்து கோஷ்டியோடு பஞ்சாபிலிருந்து சென்னைக்கு வந்திருப்பதாகவும், சிறுவர்களை மரீனா நீச்சல் குளத்தில் தற்செயலாகச் சந்தித்ததாகவும், அவர்களுக்கு இலவச அனுமதிச் சீட்டு அளித்துப் பொம்மைக்கூத்திற்கு அழைத்துச் செல்ல வடிவேலிடம் அனுமதி கேட்பதற்காக வந்திருப்பதாகவும் வினயமாகத் தெரிவித்துக்கொண்டார். வடிவேல் அவருக்கு ஏதோ சுருக்கமாகப் பதில் சொல்லி அனுப்பிவிட்டார். வீர்சிங் ஏமாற்றத்தோடு வெளியே நடந்தார்.

அவர் சென்றதும் வடிவேல் தங்கமணியைப் பார்த்து, “மணி, நீ எதற்காக அவரை இங்கு வரும்படி செய்தாய்?" என்று சற்று கடுமையாகவே கேட்டார்.

தங்கமணி பதில் சொல்வதற்கு முன்பாகவே சுந்தரம், "மாமா, நாங்கள் அவரை வரச்சொல்லவில்லை. அவரேதான் எங்களை அழைத்துப் போவதாகச் சொன்னார்" என்று உண்மையை விளக்கினான்.

"அவருக்கு எப்படி நமது வீடு இருக்குமிடம் தெரிந்தது?"

இந்தக் கேள்விக்குச் சிறுவர்களால் சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை. அவர்கள் கொஞ்ச நேரம் பேசாமல் நின்றார்கள்.

"பொம்மைக்கூத்தைப் பார்க்க ஆசையாக இருந்தால் நான் அழைத்துச் செல்லுகிறேன். இலவசமாக வேறொருவரிடம் எதையும் எதிர்பார்ப்பது நல்லதல்ல" என்று வடிவேல்