பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
88

னுக்குத் தோன்றியது. ஆனால், முதலில் அவ்வேரை எட்டிப் பிடிக்கவேண்டும். எப்படியும் தப்பவேண்டும் என்ற நிலை ஏற்பட்டதால் அவனுக்குப் பெரியதொரு துணிச்சல் ஏற்பட்டது. இடக்கையில் வேரைப் பிடித்துக்கொண்டு, வலப்பக்கமாக அப்படியே சாய்ந்து, காலை அழுத்தி ஊன்றி மேலெழும்பிக் குதித்தான். அந்த வேர் பிடிபட்டது. அங்கிருந்து கீழ்ப்பாறை மேலே குதிப்பது அவனுக்கு எளிதாக இருந்தது.

அந்த இடத்திலிருந்து மலையோரமாகவே வஞ்சியாற்றின் ஒட்டத்திற்கு எதிர்ப்புறமாகக் கொஞ்ச தூரம் போக முடிந்தது. அது அவனுக்கு மிக வசதியாக இருந்தது. ஏனென்றால், அங்கிருந்து அடுத்த திருப்பத்திலுள்ள வஞ்சியாற்றின் கரையைப் பார்க்க முடியும். அந்தக் கரையிலிருந்துதான் நூலேணி வழியாக மேலே ஏற வேண்டும். அங்கே பரிசல் அருகிலே தன் ஆள்கள் இருந்தால், பிறகு எல்லாம் எளிதாக முடிந்து விடும். அவர்களின் உதவியைக்கொண்டு தங்கமணி முதலியவர்களையும் பிடித்துவிடலாம். ரகசியக் குகையின் கதவையும் திறக்கச் செய்யலாம். அவர்கள் சுரங்க வழியாக வந்து ஒரு கயிறு வீசினால் அதைப் பிடித்துக்கொண்டு மேலே ஏறலாம் அல்லது ஆற்றில் இறங்கலாம். பரிசலை அந்த இடத்திற்குக் கொண்டுவரச் செய்து அதில் ஏறிக்கொள்ளவும் முடியும்.

இந்த எண்ணங்களோடு அவன் மலையில் உள்ள திருப்பத்தின் வழியாக எட்டிப் பார்த்தான். அங்கே இரு பரிசல்கள் தான் இருந்தன. ஆற்றில் யாரும் இல்லை. கட்டி வைக்கப் பட்டிருந்த வடிவேலையும் காணோம்.

'அந்தப் பயல் தங்கமணி என்னை முந்திக்கொண்டான்... ஆனால் அவன் என் ஆள்களை எப்படி ஏமாற்றினானோ தெரியவில்லையே! ஆள்களை ஏமாற்றாமல் அவன் வடிவேலைக் கட்டவிழ்த்து மேலே அழைத்துச் சென்றிருக்க முடியாது. எப்படியோ அவர்கள் ஏமாந்து போயிருக்க வேண்டும். அல்லது சிறைப்பட்டிருக்க வேண்டும் என்று அவன் எண்ணினான்.