பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

கோகோ ஆட்டம்


பின்பற்றுகின்ற தவறான முறைகளைக் கூறி, அவற்றிற்கான சரியான விதிகளையும் கீழே தொகுத்துத் தந்திருக்கின்றோம்.

1. ஆட்டம் தொடங்குகின்ற பொழுது

ஆட்டம் தொடங்க இருக்கிறது. விரட்டுவோர் அவரவருக்குரிய உட்காரும் கட்டங்களில் உட்கார்ந்து ஆடத் தயாராக இருக்கின்றனர். ஓடி விரட்டுகின்ற ஒரு ஆட்டக்காரர், ஒரு கம்பத்தைப் பிடித்தவாறு விரட்டுகின்ற ஆயத்த நிலையில் நிற்கின்றார்.

எதிர்க் குழுவினரில், ஓட்டத்தில் பங்கு பெறுகின்ற முதல் மூன்று ஓட்டக்காரர்களும் ஆடுகளப் பகுதியில் வந்து, ஓடத் தயாராக இருக்கின்றனர். நடுவரின் விசில் ஒலி கிளம்புகிறது. உடனே ஓடி விரட்டுவோர் ஓடி விரட்டுவதைத் தொடங்க வேண்டும். இதுதான் ஆட்டம் தொடங்குகின்ற ஆரம்ப நிலை.

நடுவரின் விசில் ஒலிக்குப் பிறகு, ஓடி விரட்டுபவர் உடனே ஓட்டக்காரர்களை விரட்டித் தொடுகின்ற முயற்சியில் ஈடுபடலாம் அதாவது நேராகவே ஓடிப் போய் (Directly) தொடலாம் என்பது தான் விதி.

முதல் மூன்று ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்த பிறகு, அடுத்த மூன்று ஆட்டக்காரர்கள் ஆடுகளத்தில் நுழைவதற்கு முன்பாக, விரட்டுகின்ற அணியினர் இரண்டு முறை ‘கோ’ கொடுத்திருக்க வேண்டும். அதைப் போலவே மூன்றாவது முறை ஆடுகளத்தில் வரும் மூன்றாவது பிரிவினரும் ஆடுகளத்தில் நுழைவதற்கு முன்பாக விரட்டுகின்ற அணியினர் இரண்டு முறை ‘கோ’ கொடுத்திருக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/56&oldid=1377509" இலிருந்து மீள்விக்கப்பட்டது