பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

99

நகை. தங்கமாக ஒரு மீன் இரண்டு முனைகளையும் இணைக்கிறது. மீனின் சிவப்புக்கல் கண் மிக அழகாக இருக்கிறது. செவிகளில் சிவப்புக்கல் கிளாவர் ஜொலிக்கும் காதணியில் முத்துக்கட்டி இருக்கிறது. நதியா குத்தோ, நகுமா குத்தோ, குத்தி அதில் ஒரு சிவப்பு நட்சத்திரம் சொலிக்கிறது. கைகளில் மும்மூன்று தங்க வளையல்கள், ஒரு சிவப்பும் முத்துமான வளையல். மூக்கில் முத்துக்கட்டிய மூக்குத்தி, விரலில் வங்கி நெளி மோதிரம். முடியைத் தளர்த்தியாகப் பின்னி காதோரம் தூக்கிய ஊசிகளுடன் பேஷனாக அலங்காரம் செய்து கொண்டிருக்கிறாள். இந்த இடத்துக்கே பொருந்தாமல், இரண்டு விரல்கடை சரிகை போட்ட, மினுமினுக்கும் பட்டில் பூப்போட்ட சேலை.... இளநீலமும் ரோசுமான கலர். அதே இள நீலத்தில் ரவிக்கை... குழந்தைகளில் பெரியவன் ஆண். எட்டு வயசாகிறது. ஆனால் நருங்கலாக இருக்கிறான். புசுபுசுவென்று ஒரு முழுக்கால் சட்டை கழுத்து மூடிய பூப்போட்ட பனியன் போன்ற மேல் சட்டை. அவன் கழுத்தில் ஒரு போட்டோ பிடிக்கும் காமிரா. பொம்மையாக இருக்கும் என்று தோன்றுகிறது. பெண் சிறியவள். அடுக்கடுக்காக ஜாலர் வைத்த பம்பென்ற லேசு வைத்த கவுன் போட்டிருக்கிறது. காதுகளில் சிறு தங்க வளையல்கள். கழுத்தில் இருக்கிறதோ இல்லையோ என்ற மெல்லிய இழைச்சங்கிலி. நட்சத்திர டாலர்.

கன்னியப்பன் அந்தச் சட்டையை சிறு குழந்தைக்குரிய ஆவலுடன் தொட்டுப் பார்க்கிறான். அந்தக் குழந்தையின் கன்னத்தைக் கையில் கிள்ளி உதட்டில் வைத்துக் கொள்கிறான்.

உடனே அந்தக் குழந்தை முகத்தைச் சுருங்கிக் கொண்டு அம்மாவைப் போய் ஒட்டிக் கொள்கிறாள்.

“அவ... அழுக்குக் கையோடு தொடுறா..”

“ந்தா. அப்படில்லாம் சொல்லக் கூடாது திவ்யா” என்று முருகன் சிறு குரலில் அதட்டுகிறான். உடனே, அவள் தொட்டாற் சுருங்கியாக அழத் தொடங்குகிறாள்.