பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

கோடுகளும் கோலங்களும்

எழுப்ப எந்திரிக்கல. நீ எங்க போயிருப்பன்னு எனக்குத் தெரியும். அவவ, நாக்கு மேல பல்லுப் போட்டு கண்டதும் பேசுறாளுவ. பொங்கலுக்கு வந்த புள்ள ஒருநேரம் தங்குனதே போதும்ன்னு கெளம்பிப் பூட்டான். நீ என்னதாண்டி நினைச்சிட்டிருக்கிறே?”

செவந்தி பேசவில்லை. பேசாமல் பால் கறக்கிறாள். பால் கறப்பவர் மனம் சரியில்லை என்றால் மாடும் பாலை எக்கிக் கொள்ளும்.

“லச்சுமி! நீயும் எனக்கு விரோதியா? வாணாண்டி" மாட்டைத் தட்டிக் கொடுக்கிறாள். பாலைக் கறந்து உள்ளே கொண்டு வந்து வைக்கிறாள். அம்மா விடுவதாக இல்லை.

"ஏண்டி செவந்தி, நீ என்னதா நினைக்கறடீ? இப்ப நீ எங்க போயிட்டு வார? கூலிக்காரப் பய. அவன் கோவிச்சிட்டா வரலன்னு பாக்கப் போற. கூடப் பொறந்த அண்ண, அண்ணி, அவுங்களப் பாத்துப் போறாமயில சாவுற!”

“தா .... வார்த்தய அளந்து பேசு! ஆருக்குப் போறாம! கன்னிப்பன என்ன சொல்லி வெரட்டின? அந்தப்புள்ள, இந்தக் குடும்பத்துக்கு ஒடம்பச் செருப்பா ஒழக்கிறவ. ஒரு ஒழவோட்டினா கூலி எம்பது ரூபா இந்த வூட்டுக்கு அது எத்தினி ஒழச்சிது? ஒம்பது மூட்ட, காக்காணில. ஒரு பதாரில்ல, கருக்காயில்லன்னு பூரிச்சி போனியே? அது ஆரூ ஒழச்சி வந்தது? ராவோடு தண்ணி பாத்து அடச்சது ஆரு? உம்புள்ளையா, மருமகப் புள்ளயா? இத சுந்தரி பாவம் புருசனில்ல. வெள்ளாம வைக்க வகையில்லாம தருமச்சோறு சாப்புடுது. பூமி நீ குந்திச் சாப்புடக் குடுக்காது. உழச்சித் தின்னத்தான் கொடுக்கும். அந்தப் புள்ள, ஒரு கள்ளம் கபடு தெரியாது. என்ன கேலி பண்ணாலும் தப்பா எடுத்துக்காது. அத்த வெரட்டிட்டே, மனசு நோகப் பேசி!”

“ஆமா வெரட்டித்தா விட்ட அததுக்கு ஒரு வரமுற இருக்கு. எதெது எங்க வைக்கணுமோ அங்க வைக்கணும். போ...டி..நேத்து மொளச்ச முசுக்கட்ட, எனக்குப் புத்தி