114
கோடுகளும் கோலங்களும்
கடலை மண்ணுக்குள் தூர் இறங்கிச்சி. அப்ப ஒண்ணைப் புடுங்கிப் பாத்தம். கடலை புடிச்சிருந்திச்சி. ஒரே ஒரு தண்ணி மட்டும் ஏரிக்காவாயில கிடைச்சிச்சி. பிறகு பே மழைதான். எட்டு மூட்டை வேர்க்கடலை கிடைச்சிச்சி. பிறகு சொன்னாங்க. ஊடு பயிரா பயிறு உளுந்து போடலாமின்னு...
இப்ப எங்க நாத்துனா குடும்பம் எனக்கு ரொம்ப ஒட்டிப் போச்சுங்க. அந்தப் பைய, கோயமுத்துார் விவசாய காலேஜில படிக்கிறா. படிச்சாலும் ஆம்புளயோ, பொம்புளயோ நாம சேத்தில கால வச்சாத்தா, ஊரே சோத்துல கை வைக்கனும்னு புரிய வைக்கணும். அச்சப்படக் கூடாதுங்க....”
கூட்டம் மாநாடு முடிந்து திரும்புகையில் செவந்திக்கு ஏதோ ஊட்டச்சத்து ‘டானிக்’ சாப்பிட்ட மாதிரி இருக்கிறது. கால் காணியில்லை, ஒரு ஏகரும் அறுபது சென்ட்டும் உள்ள முழு இடத்திலும் பயிர் பண்ண அப்பன் கடன் வாங்கித் தருவார். சின்னம்மாவின் கொல்லை மேட்டில், நாமும் ஏன் பாப்பம்மா சொன்ன கடலை பயிரிடக் கூடாது? அந்த பூமி ரங்கன் பெயரில் இருக்கிறது. இப்போது கணவர் சற்றே திருந்தி வருவது போல் நினைக்கிறாள். எனவே, அவர் மனசு வைத்துக் கடன்வாங்கித்தந்தால்... அதில் கடலையும், இதில் நெல்லும் பயிரிடலாமே...? இந்தத் தடவை முதலிலிருந்து எல்லாம் பாடம் படித்தபடி செய்துவிட வேண்டும்.
இரவெல்லாம் கிளர்ச்சியாக இருக்கிறது. அதிகாலையில் அயர்ந்து தூங்கி இருக்கிறாள்.
பொழுது விடிந்து, காலை வேலைகள் முடித்து, கிணற்றடியில் பாத்திரம் கழுவிக் கொண்டிருக்கிறாள். வாசலில் பேச்சுக் குரல் கேட்கிறது. அண்ணன்... அண்ணனும் அவள் புருசனும் பேசிக் கொண்டேபடி ஏறி வருகிறார்கள்.
ஓ, பெண்சாதியையும் குழந்தைகளையும் விட்டு விட்டுத் தனியாக வந்திருக்கிறானா? என்ன விசயம் இருக்கும்? முதலிலேயே சந்தேகம்தான் தோன்றுகிறது. அப்பா பல் விளக்கிக் கொண்டிருக்கிறார். காறிக் காறிச் செம்பு நீரை வாயில் விட்டுக் கொப்புளிக்கிறார். அண்ணன் குரல் கேட்ட வெறுப்பா? அம்மா கொண்டாடிக் கொண்டாலும் அப்பா