ஆவார். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கற்பட்டு வட்டங்களில் உள்ள கிராம விவசாய மகளிரையே என் ஆய்வுக்கு உட்படுத்திக் கொண்டேன்.
எனக்குப் பலவகைகளிலும் பயிற்சியாளரான பெண் அலுவலர் பலர் உதவினார்கள். குறிப்பாக திருமதிகள். மங்களம், பத்மாவதி, வளர்மதி ஆகியோருக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். பல கிராமங்களிலும் நான் சென்று சந்தித்த தான்வா பெண்கள் தங்கள் அநுபவங்களை ஆர்வத்துடன் எடுத்துரைத்தார்கள். வயல்களுக்கு அழைத்துச் சென்று ஒவ்வொரு அம்சத்தையும் காட்டியும், எத்தனை முறைகள் கேட்டாலும் சந்தேகம் தீர்த்து வைக்க விளக்கியும் எனக்கு உதவிய பெண்கள் பலர். அவர்களில் முசர வாக்கம் குப்பம்மாள், ‘வேண்டாம்மா’ லட்சுமி, அரண்வாயில் இந்திரா, பிரேமா, ஜகதீசுவரி, அவளூர் ஏகம்பம்மா, சுந்தரி, காக்களூர் குனாபாய் ஆகியோர் குறிப்பிடத் தகுந்த சில பெண்மணிகள். பயிற்சி வகுப்புக்கள், செயல் முறை விளக்கங்கள், பிறகு பெண்களின் அன்றாட ஈடுபாடுகள், அநுபவங்கள் எல்லாவற்றிலும் நான் பங்கு கொள்ளும் வகையில் எனக்கு உதவி புரிந்தார்கள் தான்வாக் குழுவின் இப்பெண்மணிகள்.
என்னைப் பொறுத்த மட்டில் ஒவ்வொரு நாவலும் புதிய பரிசோதனை முயற்சியாகவே இருக்கிறது. அந்த வகையில் எனக்குப் பேருதவி புரிந்த திருமதி. மங்களம் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட அனைத்துப் பெண்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தொடரை ‘புதிய பார்வை’ இதழில் வெளியிட்ட இதழாசிரியர் ம. நடராசன், இணையாசிரியர் பாவை சந்திரன் அவர்களுக்கும் என் நன்றி.
எனது எல்லா நூல்களையும் வெளியிட்டு என் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் தாகம் பதிப்பாளர் திரு. அகிலன் கண்ணன், மீனா அவர்களுக்கும் என் நன்றியை வெளியிட்டுக் கொண்டு இந்நூலை வாசகர்கள் முன் வைக்கிறேன்.
ராஜம் கிருஷ்ணன்