பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

கோடுகளும் கோலங்களும்

மரம் ஒன்று அடையாளம். முள்முள்ளாகத் தலைவிரித்த பேய்ச்சி போல் இருக்கிறது. இன்னொரு பக்கத்தில், எல்லைக் கல்லுடன் ஒர் உதிய மரம் இருக்கிறது. ஏரித் தண்ணிர் வரும் தடம் நீர் கண்டு எத்தனையோ நாட்களாயின என்று சொல்கிறது.

ஆட்டுக்குக் குழை தேடி ஒரு பயல் கம்பும் இரு ஆட்டுக் குட்டிகளுமாகப் பார்த்துக் கொண்டு போகிறான்.

நிலத்தின் நடுவே நடக்கிறாள். சிறு சிறு பாசி பூத்தாற்போல் ஒரு திட்டுப் பச்சை. வானம் எப்போதோ பொழிந்ததுண்டு என்று நம்பிக்கை கொடுக்கிறது. செவந்தி அப்போதுதான் எல்லையில் கண் பதிக்கிறாள். எல்லைக் கல்லை அடுத்த பூமியில் ஒரு நரைத்த மீசைக்காரர் அரை டிராயர் போட்டுக் கொண்டு நிற்கிறார். அங்கு கிணறு வெட்டுகிறார்கள் என்று தெரிகிறது.

அந்த மண் யாருக்குச் சொந்தம் என்று அவளுக்குத் தெரியாது.

கிணறு வெட்டி, வெளியே மண்ணும் பாறைச் சில்லுமாகக் குவித்திருக்கிறார்கள். இப்போதும் வேலை நடக்கிறது. மேலே கயிறு கட்டி, உள்ளிருந்து வரும் மண்ணை அரை டிராயர்க்காரர் வாங்கிக் கொட்டுகிறார்.

அடுத்த நிலத்தில் வசதியுள்ள யாரோ கிணறு வெட்டுகிறார். அதனால் இவளுக்கு நீர் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. செவந்திக்கு மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது. வானை நிமிர்ந்து நோக்கி தெய்வத்தை நினைக்கிறாள்.

மண் பரிசோதனைக்கு மண் எப்படி எடுக்க வேண்டும்? கூடை, சிறு மண் வெட்டி, பாலிதீன் பை, ஆகிய சாமான்களைக் கீழே வைக்கிறாள். கூடையில் அந்த நோட்டு இருக்கிறது. ஒரு தரம் பிரித்துப் படிக்கிறாள்.

நிலத்தில் ஓரிடத்தை, மேல் பரப்பை மண் வெட்டியால் வெட்டிக் கொள்கிறாள். கன்னியப்பனுக்கு இதைக் காட்ட வேண்டும் என்று ஆசை. ஆனால் அவனைக் காணவில்லை.