பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

கோடுகளும் கோலங்களும்


புருசன் ரங்கசாமியும் பன்னிரண்டு வயசுச் சரவணனும் திண்ணையில் படுத்திருக்கிறார்கள். மூத்த பெண் சரோசா ‘பத்தி’ல் படிக்கிறாள். வெகுநேரம் கூடத்து அறையில் படித்து விட்டுத் தூங்குவாள்.

அப்பா, கயிற்றுக் கட்டிலில் சுருணையாகிப் போன ஒரு மெத்தையில் கிடக்கிறார். ஒரு சிறு முட்டை பல்ப், பச்சையாகச் சுவரில் வீற்றிருந்து அப்பாவின் எலும்புக் கூட்டு மார்பு விம்மித் தணிவதைக் காட்டுகிறது. அண்ணன்... இந்த வீட்டு மகன் மண்ணைத்தட்டிக் கொண்டு மதுரைப்பட்டணம் போய்விட்டான். இந்தக் கரும்பாக்கத்துக் கிராம மண் அவனுக்கு ஒட்டவில்லை. மருமகனும் மகளும் வீட்டோடு இருக்க வேண்டிய நிலை.

மண்... மண்ணில் ஒரு புதுமை காணப் போகிறோம் என்று சுறுசுறுப்பு செவந்தியின் கைகளில் ஏறுகிறது.

கிணற்றில் இருந்து நீரிறைத்து விடுகிறாள். கொட்டிலில் இருந்து சாணம் வாரிக் கழுத்து உடைந்த சட்டி ஒன்றில் கரைக்கிறாள். வாசல் முற்றத்தில் சட சட சட் சட்டென்று ஏதோ சலங்கை ஜதியின் லயம் போல் சாண நீர் விழுகிறது.

குட்டித் திண்ணை, வாயில் நடை, உள் நடை எல்லாம் மெழுகுகிறாள். வாயிலைப் பெருக்கி முடிப்பதற்குள் வெளிச்சம் மெல்லப் பரவி, இருள் கரைகிறது. ஆனி பிறந்தாயிற்று. பள்ளிக் கூடம் திறந்து, புதிய புத்தகங்கள் தேடிப் பிள்ளைகள் போகிறார்கள். இவளும் புதிய பாடம் - புதிய பாடம் தொடங்குகிறாள் மண்ணில்...

முதலில் மண் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்றார்கள். அதைச் செய்வதற்கில்லை. இப்போது பரிசோதனைப் பட்டமாக விதைக்கப் போகிறாள். அவள்... அவளே.

ஒரு ஏக்கருக்கு எட்டு சென்டு நாற்றங்கால்.

இவளோ கால் ஏக்கர்தான் புதிய பாடம் படிக்கப் போகிறாள்.