உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

கோடுகளும் கோலங்களும்

“அப்பா வேல்ச்சாமிக்கு எட்டுக் குடுதீங்க. இன்னொரு இருபது குடுங்க.”

அப்பன் நிமிர்ந்து பார்க்கிறார். பிறகு பதில் சொல்லாமல் உள்ளே எழுந்து செல்கிறார். பெட்டியைத் திறந்து இன்னும் இருபது ரூபாயைக் கொண்டு வருகிறார்.

பார்த்துக் கொண்டிருக்கும் அம்மாவுக்கு வாய் துடிதுடிப்பதைச் செவந்தி ரசிக்கிறாள்.

கன்னியப்பன் முற்றத்தில் நின்று ‘அஞ்சலி ... அஞ்சலி’ பாட்டை மகிழ்ந்து ரசிக்கிறான்.

“அஞ்சலி சினிமாவுல வருது...”

"நீ அந்த சினிமா பாத்தியா?” என்று சரோ கேட்கிறாள்.

"இல்ல. அது காஞ்சிவரம் கொட்டாயில ஒடிச்சி....”

“இதபாரு கன்னிப்பா, பேசாம ஒரு கலர் டி.வி. டெக்கு வாங்கி வச்சிக்க. படம் ஒரு நாளக்கி மூணு வாடகைக்கு எடுக்கலாம். காஞ்சிவரத்துக்குப் போகவேணாம். வேலூருக்குப் போக வேணாம். வூட்டிலேந்து படுத்திட்டே பார்க்கலாம்..”

கன்னியப்பன் வெள்ளையாகச் சிரிக்கிறான். “நீ வாங்கி வையி, சரோ நான் நெதியும் பாக்கறேன்.”

பாட்டிக்குக் கொள்ளாமல் கோபம் வருகிறது.

“த... வேல முடிஞ்சிச்சா, கூலிய அங்கேயே வாங்கிட்டுப் போக வேண்டியதுதானே? உள்ளாற வந்து, என்ன சிரிப்பு, பேச்சு? ஏ. சரோ, உள்ள உன் ரூம்புக்குப் போ கூலிக்காரங்கிட்ட என்னவெ கண்டப் பேச்சு?”

கன்னியப்பன் முகம் ஊசி குத்தினாற் போல் சுருங்கி விடுகிறது. அவன் மேற்கொண்டு இருபது ரூபாயை வாங்கிக் கொள்ளாமலே போகிறான்.