உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

கோடுகளும் கோலங்களும்

அவள் கை வேலையை விட்டு விட்டு மனம் துள்ள வாயிலுக்கு வருகிறாள்.

“வாங்கையா. வணக்கம். வாங்கையா, உள்ளாற வாங்க திண்ணையில் உக்காந்துட்டீங்க...” என்று அகமும் முகமும் பூப்பூவாய் சொரிய வரவேற்கிறாள்.

"ம்... இருக்கட்டும்மா. இதுதா சவுரியமா இருக்கு... இவங்க ஊக்கமாப் பாடு படுறதப் பாக்கவே சந்தோசமா இருக்கையா... நான் படையில் இருந்தவன். எங்கோ பாலைவனப் பிரதேசத்தில் உள் நாட்டுச் சண்டைகளைச் சமாளித்து நிறுத்தும் அமைதிப் படைக்குப் போனவன். சண்டையெல்லாம் ஏன் வருது? சாப்பாடு, தண்ணி, காத்து, மானம் மறைக்கத்துணி, இடம் இதெல்லாம் எல்லோருக்கும் சரியாக இல்ல. ஒருத்தன மத்தவன் வஞ்சிக்கிறான். சுரண்டுறான். சனங்களுக்கு ஒருத்தர் மேல ஒருத்தர் நம்பிக்கையில்லை. பொம்பளங்க, கர்ப்பிணிங்க, பச்சபுள்ளங்களுக்குக் குடுக்கப்பட்ட தருமப் பால் ரொட்டியக் கொள்ளயடிச்சு விக்கிற மகா பாவம் பாத்தேன்... மனசு தவிச்சி என்ன புண்ணியம்? ஒரே மகன். தங்கச்சி மகளுக்குக் கட்டிக் கொடுத்தேன். நமக்குத்தா ரொம்ப படிக்க வசதியில்ல. பையன் நல்லா பி.ஏ., எம்.ஏ.,ன்னு படிக்கணும்னு ஆசப்பட்டேன். அவன் படிக்கிறத வுட, அரசியல் அக்கப் போர், சினிமா நடிகர் விசிறிகள் சங்கம்னு தலையக் குடுத்திட்டு... பாவிப் பய, தலைவருக்காக தீக்குளிச்சிச் செத்தான். கலியாணம் கட்டி வேற வச்சேன். அந்தப் பொண்ணு பாவத்தைக் கொட்டிக்கிட்டான்..” தலையைக் குனிந்து கொள்கிறார்.

இவளுக்கு நெஞ்சு சில்லிட்டாற் போல் இருக்கிறது.

சிறிது நேரம் ஒலியே சிலும்பவில்லை.

லச்சுமி... பச்சை பால் மணம் மாறாத முகம். அதற்கு ஒரு குழந்தை. அதற்குள்...

“அரசியல் தலைவருக்காக, இவனுவ ஏ நெருப்புக் குளிக்கிறானுவ... பயித்தியம்தான் புடிச்சிருச்சி. அவனுவ ஒட்டு வாங்க என்னமோ புரட்டு பித்தலாட்டம் பேசுறானுவ.