உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

கோடுகளும் கோலங்களும்

"நீங்கல்லாம் சாப்பிடுங்க. நான் காபியே குடிக்கிறதில்ல. என் தங்கச்சி குடிக்கிது. தங்கச்சிப் புள்ளயும் குடிக்கிது. இல்லாட்டி தல நோவுதுங்க. வடக்கேல்லாம் போறப்ப, தேத்தண்ணி குடிப்பம். மனசு இளகல, மறக்க பீர் குடிப்பம். இங்க எண்ணத்துக்கு? மனசு தெளிஞ்சி உறுதியாயிடிச்சி. பொய்யும் பித்தலாட்டமுமா இருக்கிற உலகத்துல வாழணும் பாருங்க” __

"கேணி எடுக்கறப்ப, சில்லும் களியும் கரம்பையும் எல்லாம் வந்திச்சி. பாறை இல்ல. தண்ணி அந்தச்சில்லிங்களா வர்றப்ப குபுகுபுன்னு வந்திச்சி. தெளுவா. இப்ப குழப்பம் இல்ல. காலம எந்திரிச்சி நீராகாரம்தா குடிப்ப ஆச்சி. எனக்கு அறுபதாகப் போவுது. காலம கழனி வேல, அஞ்சாறு கிலோ மீட்டர் நடை, எல்லாம் நல்லாருக்கு...”

“இருக்கட்டும் நீங்க ஒரு டம்ளர் குடியுங்க. நம்மூட்ல கறந்த பாலு...”

அவர் எடுத்துக் கொள்கிறார்.

புருசன் முன்பு பணம் தருவது பற்றிப் பேசப்போகிறாரோ என்று செவுந்தி அஞ்சுகிறாள்.

ஆனால் அது நடக்கவில்லை.

அவன் சட்டையைப் போட்டுக் கொண்டு, “ஐயா, கொஞ்சம் வேலை இருக்கு. நீங்க உட்கார்ந்து பேசிட்டிருங்க...” என்று நடையில் உள்ள சைக்கிளை உருட்டிக் கொண்டு கிளம்புகிறான்.

அவன் சென்ற பிறகு அவர் செவந்தியைக் கூப்பிடுகிறார்.

ஒரு கவரை தன் சட்டைப் பையில் இருந்து எடுத்து நீட்டுகிறார்.

“செவந்திம்மா, இதுல ஆயிரத்தைந்நூறு இருக்கு. நீங்க எவ்வளவு பயிர் வைக்க முடியுமோ, அவ்வளவுக்கு வையுங்க.. பிடியுங்க..”

அவளுக்குக் கண்கள் நிறைகின்றன.