பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

145

பிள்ளையே பெற்றிராதவள் ஒரு கைப்பிள்ளையை வைத்துக் கொண்டு தடுமாறுவது போலிருக்கிறது!

வீட்டு வேலை முடிய மணி பன்னிரண்டாகிறது. காலையில் பழைய சோறு உண்டது திம்மென்றிருக்கிறது. வடித்த கஞ்சியில் உப்புக் கல்லைப் போட்டு அருந்துகிறாள். விடுவிடென்று கொல்லைக்கு நடக்கிறாள். கடலைப் பயிர் பரந்து சிறுசிறு இலைகளுடன் கண் கொள்ளாக் காட்சியாகப் பசுமை விரித்திருக்கிறது. ஊடுபயிர்... பயிறு, உயரமாக அகன்ற பெரிய இலைகளுடன் தன்னை இனம் காட்டிக் கொள்கிறது. அடுத்த வாரம் களை எடுத்து மண் அணைந்து ஜிப்சம் போட வேண்டும். இது அப்பன் பொறுப்பு. அவரே வண்டி ஒட்டிச் சென்று எடுத்து வந்து விடுவார். இப்போதெல்லாம் உடம்பு அவ்வளவு மோசம் இல்லை...

வெயில் உரைக்கவில்லை. உடமையாளில்லாமல் எழுத்துக் குத்து இல்லாமல், யாரோ ஒருவர், வீட்டுக்குக் கொண்டுவந்து பணம் கொடுத்தார். பிரியமாக, உரிமையுடன் அவளை வந்து பார்க்கச் சொல்கிறார். கால்கள் மனோ வேகமாக இழுத்துச் செல்கின்றன. எங்கே தரிசு, எங்கே பச்சை, எங்கே ஆடு மேய்கிறது என்று எதையும் பார்க்காமல் அவள் நடக்கிறாள்.

கழனிப்பக்கம் யாருமே இல்லை. பம்ப் ரூம் பூட்டிக் கிடக்கிறது. நாற்றுக்கள் பிடித்து, தலை நிமிர்ந்து நன்றாகத்தானே வளர்ந்திருக்கிறது.

வரப்பிலே நடந்து பார்க்கிறாள். முழுப் பரப்பையும் பார்க்கும் பொறுமை இல்லை. நோயொன்றும் இல்லை. கன்னியப்பன் சொன்னாற் போல் விட்டுப்போன இடத்தில் மூன்று நாட்களான பின் விட்டு வைத்திருந்த நாற்றுக்களை ஊன்றியிருக்கிறாள்.

அது வளர்ச்சி குறைந்து தெரிகிறது. களைக்கொல்லி போட்டு, நாற்றுக்களை அஸோஸ்பைரில்லத்தில் நனைத்து நன்றாகவே நடவு செய்தார்கள் இருபது ஆட்கள். கிணற்றடிக்கு வருகிறாள். கிணற்றில் தண்ணீர் தெளிந்து இருக்கிறது. ஒராள் ஆழம் இருக்கும். நான்கடி கூட இல்லை