பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

கோடுகளும் கோலங்களும்

“லச்சுமி’ என்று தட்டிக் கொடுத்துவிட்டு உட்கதவை மெல்லத் திறந்து கொண்டு வருகிறாள். அப்பா கட்டிலில் உட்கார்ந்திருக்கிறார். டார்ச் விளக்கை ஆணியில் தொங்க விடுகிறாள்.

“ஏம்மா, என்னக் கூப்பிடக் கூடாது. தனியே நீ இருட்டில் போற? கன்னிப்பன் வாரதில்லயா இப்ப?”

“வர்ரான். எனக்குத்தான் அவனையும் ரொம்ப எதிர் பார்க்கக்கூடாதுன்னு... சரோ தூங்கிடிச்சா...?”

“அவப்பாகூட இந்நேரம் பேசிட்டிருந்திச்சி. முருகனோட மச்சினிச்சி மட்ராசில இருக்கால்ல ? அதா நாகு கூடச் சொல்லிச்சே வூடு கட்டிருக்காங்க, அவ இஸ்கூல்ல வேல செய்யிறாங்கன்னு, அவ மதுரைக்கு அக்கா வூட்டுக்குப் போறாளாம். இவெம் பாத்தாப்புல. இங்க கொண்டாந்து வுட்டுப் போடுங்க. நாங்க பத்திரமா கூட்டிப் போறம்னு சொன்னாங்களாம். கேக்கணுமா? குதிச்சிட்டிருக்கு. இப்பவே உடனே துணி மணியெல்லாம் பையில எடுத்து வச்சிட்டிருக்கா. இந்த வூட்ல ஒரு நல்ல பொட்டியோ, எதுவோ இல்லேன்னு சிலுப்பிட்டிருந்திச்சி. அதும் அவப்பா காலம வாங்கித்தாரேன்னு சொல்லியிருக்காப்பல...”

அவள் பேசவேயில்லை.

காலையில் இவளுக்கு விழிப்பு வருவதற்கு முன்பே சரோ தயாராகிவிட்டது தெரிகிறது. கிணற்றடியில் தண்ணிர் இரைத்துக் குளிக்கிறாள். அவள் அப்பாவும், குளித்தாயிற்று. இவள் பூப்போட்ட பளபளப்புப் பாவாடையும், பெரிய கை ஜாக்கெட்டும் போட்டுக் கொண்டு தாவணி அணிந்திருக்கிறாள். முன் பக்கம் சுருட்டையாக முடியை அலங்காரம் செய்து கொண்டிருக்கையில் செவந்தி பக்கத்தில் போய்ப் பார்க்கிறாள்.

“இப்ப. கால பஸ்ஸுக்குப் போறீங்களா?”

“ஆமா..இன்னைக்கு மத்தியானம் அவங்க வைகையில் போறாங்களாம். எப்படின்னாலும் டிக்கட் சமாளிச்சிக்கலான்னு சொன்னாங்களாம். ... ஒரு நல்ல பொட்டிகூட இல்ல... பையில வச்சிக் கொண்ட்டுப் போற...”