ராஜம் கிருஷ்ணன்
161
சைக்கிள்...” என்றெல்லாம் ஆசை காட்டி அவனைச் சமாதானப்படுத்துகிறாள்.
இந்நாட்களில் கன்னியப்பன் அவள் கண்களில் தட்டுப்படுவதில்லை. பட்டாலும் முன்போல் வெள்ளையாகப் பேச்சுக் கொடுப்பதில்லை.
நெற்பயிர் கதிர் பிடிக்கிறது.
அன்று, கன்னியப்பன் பம்ப் ரூமுக்குப் பக்கத்தில் விநோதமாகக் காட்சி அளிக்கிறான். வரி வரியான பனியன் மேனியை முழுமையாக மூடுகிறது. மஞ்சளும் பச்சையுமான பட்டை கண்களில் பளிரென்று படுகிறது. இடுப்பில் வேட்டி தார்பாய்ச்சாமல்... கையில் ஒரு டிரான்சிஸ்டர். அதிலிருந்து வரும் பாடலை அவன் ரசிக்கிறான் என்று தெரிகிறது. "ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால், அந்த உறவுக்குப் பெயர் என்ன... காதல்...” என்ற பாட்டு தெளிவாகச் செவந்தியின் செவிகளில் விழுகிறது.
அவள் நின்று நிதானித்துப் பாட்டு எதையும் கேட்பதில்லை. சில பாட்டுக்கள் தொடக்கத்திலேயே அசிங்கம் என்று அவளுக்குத் தோன்றும். சரோ இம்மாதிரி பாட்டுக்களை அலறவிடும்போது கோபமாக வரும்.
கல்யாணமான புதிதில் அவள் புருசன் அவளைக் காஞ்சிபுரம் சினிமா தியேட்டருக்குக் கூட்டிச் சென்றிருக்கிறான். “சீ என்னங்க அசிங்கமா டிரஸ் போட்டுகிட்டுக் கூச்ச நாச்சம் இல்லாம வாராங்க. இதெல்லாமா நல்ல சினிமா” என்றாள். இப்போது வீட்டுக்கு வீடு டி.வி. வாங்கி வைத்திருக்கிறார்கள். அம்சு வீட்டில் ஒரு கறுப்பு வெள்ளை இருக்கிறது. வேல்ச்சாமி அவன் அம்மா வாங்கி வைத்திருக்கிறாள். நீலவேணி வீட்டில் இருக்கிறது. சுந்தரிக்குக் கலராக வாங்க வேண்டும் என்று உள்ளுர ஆசை. இதில் சினிமாவே பார்க்க வசதியாக மேலும் பத்து பன்னிரண்டாயிரம் கொடுத்து டெக் வாங்கி வைத்து சினிமாப் பார்ப்பதாம். இளசுகள் எப்படி உடம்பு வணங்கி வேலை செய்யும்?