பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/167

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

165

வேணி, அம்சு எல்லோரும் கடலை உதிர்க்கிறார்கள். சுந்தரியும் அம்மாவும் அத்தனை பேருக்கும் சோறு பொங்கிக் கொண்டு வருகிறார்கள்.

எல்லோருக்கும் சந்தோசம். “அதாஅதா குண்டெலி, அடி. அடி வேல்ச்சாமி!”

வளைகளில் இருந்து தலை நீட்டும் எலிகளுக்குக் கபால மோட்சம்தான். ஒரு பத்துப் பதினைந்து எலிகள் அடிபடுகின்றன.

“இந்தா கடலையை வுடு, எலியத் தூக்கிட்டுப் போ" என்று காகத்துக்குத் தூக்கி எறிகிறான் கன்னியப்பன்.

“நல்ல பால்கடலை. காஞ்சா எண்ணெய் நல்லா வரும்” என்று வேணி சொல்கிறாள்."என்ன ரகம் இது? ஆபீசிலதான கேட்டு வாங்கின?”

"ஜி.ஆர்.ஐ. நல்ல ரகம், போடுங்கன்னாரு...”

"அக்கா வேர்க்கடலை வடை சுட்டிருக்கீங்களா?”

‘இல்லையே? எப்படிச்சுடுறது?”

“இத்தோட கொஞ்சம் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு , உப்பு முளவு சோம்பு போட்டு அரச்சி, வெங்காயம் இஞ்சி கொத்தமல்லி கறிவேப்பிலை போட்டு வட சுட்டா பஷ்டா இருக்கும்!”

“நீ ஒரு நா டிபன் போடு!”

“பின்ன ஒரு வடை 1 ரூவா" என்று சிரிக்கிறாள் வேணி.

“இதே கடலையைக் கொதிக்கிற வெந்நீர ஊத்தி ஊறவச்சி, தோலிய எடுத்திரனும். பிறகு பருப்ப நல்ல வெண்ணெயா அரச்சிப் பால் போல் கரச்சி அடுப்பில வச்சிக் காச்சணும். சர்க்கரை போட்டு சுண்டக் காச்சின பாலவுட்டு ஏலக்கா போட்டா, பாயசம் ரொம்ப நல்லா இருக்கும்....”

“பண்ணினாப் போச்சி. நிசமாலுந்தா. ஒரு நா அமாவாசக் கூட்டத்த நம்மூட்டில வச்சிட்டு, பாயசம் பண்ணி வைக்கிறேன்...” என்று சொல்கிறாள் செவந்தி.