பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

173

டெலிபோன் வைப்பாங்களாம். அதோட ஜெராக்ஸ் லாமினேஷன்லாம் வச்சிட்டா நா ஆபிசையும் பாத்திட்டு, இவங்களுக்குக் கையாளா இருப்பேனாம்.. என்ன வச்சிட்டே இப்படிச் சொன்னாங்கம்மா.. அந்த லூசு பல்ல இளிச்சிட்டு என்னத் தொட்டுத் தொட்டுப் பேசறப்ப அவம்மா ஒன்னும் சொல்லமாட்டா...”

அழுகை கட்டுப்படுத்த முடியாமல் வருகிறது அவளுக்கு. மகளின் முதுகை அவள் ஆதரவாகத் தடவுகிறாள். “நீதா வந்திட்டியேம்மா. அழுவாத, நீ எங்கும் போக வேண்டாம். நா உன்ன மேல சேர்த்துப் படிக்க வைப்பேன். அவன் கெடக்கிறான். சொந்தத் தாய் தகப்பன மதிக்கல. போகட்டும். அவனவன் பொண்ணு பிள்ள பெத்து வச்சிருக்கிறான். காலம் வரப்ப தெரியும்...”

“அம்மா நீ சொன்னப்ப நா நினைக்கவே இல்ல. எப்படிம்மா மனிசங்க இப்படி இருக்கிறாங்க! அவங்க நிலத்தில நீ பயிரு போடுறியாம். அதுக்கு அவங்களுக்குப் பணம் குடுக்கணுமாம்... மாமி சொல்லுது.. நா அடுத்த நிமிசமே மாமாகிட்ட, நா ஊருக்குப் போறேன். என்ன ஏத்தி வுடுங்கன்னிட்டேன். காலம பஸ்ஸுக்கு அவருதாவந்து ஏத்துனாரு. சொல்றாரு சரோ இங்க வீட்ல இருக்கிறது தோதுப்படாது. நீ அங்கேயே பக்கத்தில எதானும் பாலி டெக்னிக்ல சேர்ந்து படி. நா ஒண்னும் செய்யலேன்னு நினைக்காத...ன்னு பஸ் டிக்கெட் எடுத்துக் குடுத்திட்டு நூறு ரூபா கையில் குடுத்தாரு. எனக்கு அவுரு மூஞ்சியில எறிஞ்சிடணும்ன்னு கோவம் வந்திச்சி. ஆனா பெரியவங்க. அவுரு ஏ, மாமிக்கு அப்படிப் பயப்படறாரு. அப்பால்லாம் உன்ன எப்படி வெரட்றாரு? ரேடியோவப் போட்டு உடைச்சாரே மாமா, மாமி என்ன சொல்றாங்களோ அதுக்கு மாறு இல்லாம நடக்கிறாரு. இந்த நூறு ரூபா அவளுக்குத் தெரிஞ்சி குடுத்தாராங்கிறது சந்தேகம். அப்படி அவங்ககிட்ட என்ன பவர் இருக்கு?...” சரோ அங்கிருந்து செல்லும் போது பக்குவம் வராத குழந்தையாக இருந்தாள். இப்போதோ, இந்த ஒரு மாதத்தில் எவ்வளவு மாற்றம்!

“செங்கல்பட்டு வந்ததும் இறங்கி, நம்மூர் பஸ் புடிச்சிட்டு ஒடியாந்தேன். கடயில அப்பா இல்ல. சைகிள் கூட கேக்கல. நடந்தே வந்தேன்.”