பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

175

வருசம் படிப்பேன். பிறகு அதற்கு எதானும் வேலை கிடைக்கும். அதற்கப்புறம் எம்.ஐ.இ எதிலானும் படிக்கலாம்ன்னு எங்க ஜூலி மிஸ் சொல்றாங்க.. லயன்ஸ் அம்மா பாலிடெக்னிக்லே இங்கேயே எடம் கிடைக்கும்ன்னு சொல்றாங்க... ஆனா பாய்ஸ்கூடப் படிக்கணும்..”

அவளே சொல்லிக் கொண்டு போகிறாள்.

செவந்தியோ, கடலை விளைவித்த நிலத்தில் பசுந் தாளுடன் உழுது சுவர்ண வெளிப்பட்டத்துக்கு மும்மரமாக உழவோட்டி, நாற்றங்கால் பயிர் செய்கிறாள்.

கொல்லை மேட்டு விளைச்சலும் இவளைத் துாக்கி விடுகிறது. அடுத்து அங்கு வேர்க்கடலை பயிரிட ரங்கன் வங்கியில் கடன் பெற உதவுவதாக உறுதி கூறுகிறான்.

நாட்கள் இறக்கை கட்டிக் கொண்டு பறக்கின்றன. சரவணனுக்குப் பள்ளிக் கூடம் திறந்தாயிற்று. செவந்திக்கு, தான்வா ஆபிசர் அம்மாளைச் சென்று பார்க்க வேண்டும், மகள் படிப்புக்கு அவள் யோசனையைக் கேட்க வேண்டும் என்ற ஆர்வம்.

ரங்கனுடன் கொல்லை மேட்டுப் பயிருக்குக் கடன்வாங்க நிலவள வங்கிக்குச் செல்கிறாள்.

“அம்மா உங்க வீட்டுக்காரரா? பூமி அவங்க பேரில இருக்குதா?” என்று கேட்டுக் கொண்டு விண்ணப்ப படிவம் தருகிறார், அவருக்கு நன்கு பரிச்சயமான வங்கிக்காரர்.

வேர்க்கடலை பயிர் இடையில் ஊடுபயிர் உளுந்து, வரப்பில் சுற்றி ஆமணக்கு என்று விரிவாக்கப் பணியாளரின் ஆலோசனைப்படி தீர்மானம் செய்கிறார்கள்.

இங்கே கையெழுத்து அங்கே கையெழுத்து என்று அவரே எல்லாம் காட்டுகிறார். செவந்திக்குப் புருசனுடன் வந்து அவரும் தன் உழைப்பில் பங்கு பெறுகிறார் என்று வெளியுலகுக்கு அறிவிப்பதே பெருமையாக இருக்கிறது.

காற்றுக்காலம்போய், சுவர்ணவளிப்பட்டம் நடவு வயல் உழுது சீராக்கும் பருவம்..