பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/179

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

177


கன்னியப்பன் அரையில் அணிந்த சட்டியுடன் முன்னே செல்கிறான்.

“மாமோவ்.... முதலாளி அம்மா வாராங்க. பாத்து உழுங்க!...”

கேலிச் சிரிப்பு காற்றின் அலைகளுடன் வந்து செவிகளில் மோதுகிறது.


19


“யக்கோ...”

“என்ன கன்னிப்பா! ஒரே சந்தோசமா இருக்கே! என்ன விசயம்?”

“அக்காவக் கூப்பிடுங்க மாமா. அவங்க கிட்டத்தா மொதல்ல சொல்லணும்.”

“செவந்தி, கன்னியப்பன் கூப்பிடுறான்...” கணவன் முற்றத்தில் நின்றபடி கூறுகிறான்.

“என்னன்னு கேளுங்க! நா சோறு வடிச்சிட்டிருக்கே. சரோ காலேஜிக்குக் கிளம்பிட்டிருக்கு...!”

உள்ளிருந்தபடியே அவள் குரல் கேட்கிறது.

சரோ இப்போதெல்லாம் பாவாடை தாவணி சேலை அணிவதில்லை. இரண்டு செட் சல்வார் கமிஸ் வாங்கியிருக்கிறாள். காலை ஏழரை மணிக்குள் வீடு விட வேண்டும். அதிகாலையிலேயே எழுந்து சித்தமாகிறாள். எப்போதுமே சரோவுக்கு சுத்தமாக மடிப்பாக உடை அணிய வேண்டும். பள்ளியில் படித்த நாட்களிலும் சீருடையைத் துவைத்து உலரப் போட்டிருந்தால், விரித்து விட்டு அழகாக மடித்துக் கொள்வாள். இப்போது கூடுதலாக இந்த உணர்வு வந்திருக்கிறது. காலையிலேயே சோப்பு போட்டு அலசி உள் முற்றத்துக் கயிற்றில் உலர்த்தி விடுகிறாள்.

கோ.கோ-12