உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

கோடுகளும் கோலங்களும்

“என்னம்மா நீ! என்னால முடியாது! நீ சோறு வடிச்சிட்டுப் போ! பெரிய பாயைத் தூக்க முடியாது!”

“என்னது? பொம்புளையாப் பிறந்துட்டுப் பாயைத் தூக்க முடியாதுங்கற? சம்சாரி வீட்டுப் பொண்ணு! இந்த சல்லியம் எல்லாம் இங்க நடக்காது. காலம எந்திரிச்சி அந்த ரேடியோவத் திருகிவுடறே. அது என்ன பாட்டுடீ! சட்புட்ன்னு வேலையைப் பாரு! இன்னக்கிப் புதுசா உங்கையில நடவு செய்யி, கத்துக்க! உம் போல படிச்ச பொண்ணுகதா வரணும். சாந்தி பத்துப் படிச்சிருக்கா. அவ ஒண்டியாளா, கொல்ல மேட்டுல பயிரு வைப்பேன்றா! படிச்சிப்புட்டா மண்ணு அந்நியமில்ல. வந்தாங்களே பெரிய மேடம். அவங்க பெரிய பெரிய படிப்புப் படிச்சவங்க இதைச் சொல்லிக் கொடுத்தவங்க எல்லாரும் பெரிய... படிப்புப் படிச்ச பொம்புளங்க. நாப்பது வருசமா ஆம்புளங்களுக்குப் புதுத் தொழில் நுணுக்கம் சொல்லிக் கொடுத்தோம். பொம்புளங்க கையில் பலமும் வரல, சக்தியும் வரல. இப்ப நேரடியா பொம்புளங்களுக்கே சொல்லித் தரோம்னு அரசே சொல்லி வந்திருக்கு... வாம்மா, கண்ணு, உங்கையாலே நாலு குத்து வச்சிட்டுப்போயிடு!” என்று மெல்ல ஊசி குத்தினாள். ரங்கனுக்கு இது மறைமுகத் தாக்குதல்.

அவன் மண்ணில் உழைப்பவனாக இருந்தால், கொல்லை மேட்டுப் பூமி தரிசாகக் கிடக்காது. ஏதோ ஒரு போகம் போடலாம். அண்ணன் படிப்பென்றும், வேலை என்றும் பந்தகம் வைத்த பூமி மீட்கப்படாமலே போக வேண்டாம். எஞ்சியிருக்கும் ஒரு ஏக்கரிலும் கூலிக்கு ஆள் பிடித்து மல்லுக் கட்ட வேண்டியதில்லை. சொந்த அத்தை மகன்தான். பத்து படித்ததும் காலரைத் துக்கிவிட்டுக் கொண்டு மண் ஒட்டக் கூடாது என்று கெளரவம் பாராட்டினான். அத்தையும், மாமாவும் போன பிறகு, இரண்டு பெண்களைக் கல்யாணம் கட்டிக் கொடுத்து, இரண்டு பையன்களுக்கும் பிரிவினை என்று வந்தது. இவன் தன் பங்கை தன் தம்பிக்கு விட்டுக் கொடுத்து, பணம் வாங்கினான். பெரிய சாலையில் சைக்கிள் கடையாக, சைக்கிள் மராமத்துக் கடையாக இருக்கிறது. அவன் எப்போதேனும் அதில் இருந்து உபரி வரும்படி என்று இவள் கையில் நோட்டோ, பொன்னோ, துணியோ கொடுத்ததாக நினைவில்லை.