பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/180

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

கோடுகளும் கோலங்களும்

“ஏம்மா நா நல்லா அலசி உலர்த்த மாட்டேனா உனக்கு நேரமாகுமில்ல?”

“நீ பிரிக்கவே மாட்டே. நான் உலர்த்தி மடிச்சிப் பெட்டிக்கடியில் வச்சா, இஸ்திரி போட்ட மாதிரி இருக்கும்.” என்று சொல்கிறாள்.

கன்னியப்பன் முற்றத்தில் பார்த்துக் கொண்டே நிற்கிறான்.

“என்ன சமாச்சாரம் எங்கிட்டச்சொல்லக் கூடாதா?"

"உஹூம் ... அம்மாகிட்ட மட்டும் தான் சொல்லுவ..." என்று வெள்ளைச்சிரிப்புடன் நெளிகிறான்.

"சரி சரி அம்மா நீ போயிக் கேளு. நாசாப்பிட்டுக்கிறே...”

“என்னவாம் அவனுக்கு அவுசரம் இப்ப?” சுடுசோற்றை ஒரு தட்டில் போட்டு ஆற வைக்கிறாள். தட்டில் ஒரு ஈடு இட்டிலியைத் தட்டி சாம்பார் கிண்ணத்தை நகர்த்தி வைக்கிறாள்.

சரோ தண்ணீர் குப்பியில் தண்ணிர் ஊற்றித் திருகிக் கோணிப்பை போல் பெரிதாக இருக்கும் பையில் வைத்துக் கொள்கிறாள். உள்ளே சாப்பிட உட்காருகிறாள்.

“அம்மா, டிபன் டப்பியில் ஒரு ஸ்பூன் வேணும். நேத்து ஸ்பூன் எங்கோ விழுந்திருக்கு தெரியல...”

“என்ன கன்னிப்பா? என்ன விசயம்? மீசைக்காரரு சொல்லி அனுப்பினாரா?”

அவன் அவளை நடை வரை தள்ளிச் செல்கிறான்.

"வந்து... இன்னிக்கி சாயங்காலம் நீங்களும் மொதலாளியும் வரீங்க. அதுக்கு மின்னாடி காலம காஞ்சிபுரம் வர்ரீங்க...”

‘'எதுக்கு? என்ன சொல்லுற நீ?”

“அதாங்க, உங்களுக்கு தெரியுமேக்கா...! மீசக்காரரு, இன்னிக்கி நிச்சிதார்த்தம் வச்சிக்கலான்னு...”