பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/184

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

கோடுகளும் கோலங்களும்

ஓட்டலில் எந்த நேரத்திலும் கும்பல் இருக்கும் போலும்! கன்னியப்பனுக்கு இந்த மாதிரி வெளிப்பாடு என்றோ ஒரு நாள்தானே? மேசையில் உட்காருகிறார்கள்.

“யப்பா, மூணு அல்வா, மூணு மசால்தோசை, கொண்டா".

“தோசைவேற என்னாத்துக்கு? ஸ்வீட் போதும்...”

"அட நீங்க சும்மா இருங்கக்கா" மஞ்சளாக அல்வா ஒரு தட்டில் வருகிறது.

கன்னியப்பன் கொஞ்சம் எடுத்து வாயில் வைத்துக் கொள்கிறான்.

“நல்லாருக்கா... அன்னிக்கொருநா வேறொரு ஒட்டல்ல மைசூர் பாக் வாங்கின. ஒரே காரல் கசப்பு...” என்று பேசிக் கொண்டே அநுபவிக்கிறான்.

“கன்னியப்ப நெறையப் பணம் சேத்து வச்சிருக்காப்பல?”

அரும்பு மீசையைப் பல்லால் கடித்துக் கொண்டு அவன் சிரிக்கிறான்.

“எவ்வளவு வச்சிருக்கேப்பா சும்மா சொல்லு!”

“என்ன மொதலாளி, நீங்க?”

“எவ்வளவு? பத்துத் தேறுமா?”

"அவ்வளவுக்கில்லீங்க. ஏழுக்கு ஒரு பத்திரம் வாங்கி வச்சிருக்கிறேன். ஆறு வருசத்துல ரெண்டு பங்காகும்னாங்க. அதிர்ஷ்டம் இருந்தா டி.வி. காரு எல்லாம் பிரைஸ்கூட வருமாம்...” சிரிப்பாய் வழிகிறது.

"வந்திச்சின்னா, சொந்தத்துக்கு ஒரு அரக்காணி, கால்காணினாலும் வாங்கணுங்க...”

“இப்பத்தான் உனக்குப் பொஞ்சாதி வழிவருதில்ல? ரெண்டேகராவுக்கு மேல இருக்குமே?”

“நமக்குன்னு ஒரு அம்பது சென்ட்ன்னாலும் இருக்கணுங்க.”