பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

கோடுகளும் கோலங்களும்

அலங்கரித்திருக்கிறார்கள். ஒயர் இழுத்து வாசல் கம்பத்தில் இரண்டு வாழைத்தண்டு விளக்குகள் போட்டிருக்கிறார்கள். லட்சுமியே வாசலில் வந்து “வாங்கக்கா!” என்று அழைக்கிறாள். பூப்போட்ட ஒரு பச்சை சில்க்குச் சேலை அணிந்திருக்கிறாள். பின்னல் பின்னித் தொங்கவிட்டு ரிப்பன் முடிந்து, நிறையப் பூச்சூடி இருக்கிறாள். காதில் தோடு, மாட்டல், இரண்டு மூக்கிலும் மூக்குத்தி அணிந்து, புதுமையாக காட்சித் தருகிறாள். பெண் குழந்தை, அவன் வாங்கி வந்திருக்கிற புதிய கவுனை அணிந்திருக்கிறது. ராமையா, பின்புறம் சமையல் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பவர், இவர்களைக் கண்டு விரைந்து வருகிறார்.

“வாங்க, வாங்க சம்பந்தி அம்மா...எங்க நம்ம இன்ஜினிர் பொண்ணு வரல?”

“வருவா. முன்ன பின்ன வூடு வர ஆறு மணி ஆகுது சில நாள்ள. வந்ததும் வந்திடுவா.”

“சின்னப் பய்யன் வரல?”

“அவ கூட வருவான். படிச்சிட்டிருக்கச் சொன்னேன்...”

வெற்றிலைப் பாக்கு, பழம், கல்கண்டு, சர்க்கரை எல்லாவற்றையும் எடுத்துத் தட்டுக்களில் வைக்கிறார்கள்.

"மாப்புளயக் காணல?”

“இத வந்திடுவா. நீங்க காபி சாப்பிடுங்க!”

லட்டு காராபூந்தி கொண்டு வைக்கிறாள் லட்சுமி. அவள் அம்மா காபி கொண்டு வருகிறாள்.

சற்றைக்கெல்லாம் புது மாப்பிள்ளையாக, கன்னியப்பன் வருகிறான். நெற்றியில் சந்தனம், குங்குமம், மில்காரர் அங்கவஸ்திரம் விசிற வந்து உட்காருகிறார். அண்டை அயல்காரர்கள், வங்கிக்காரர் ராமலிங்கம், எல்லோரும் வர களை கட்டி விட்டது. ஆடியோ காசெட், நாதசுரம் ஒலிக்கிறது. ரங்கனும் செவந்தியும் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் ராமையாவும் அவர் சகோதரியும் நின்று பாக்கு வெற்றிலை மாற்றிக் கொள்கிறார்கள்.