பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

195

சரோ “தேங்க்யூ மேடம்” என்று சொல்லிக் கொண்டு உட்காருகிறாள்.

“இந்தம்மா தஞ்சாவூர் பக்கத்திலிருந்து வந்திருக்காங்க. வளர்மதின்னு பேரு. தான்வா பயிற்சியெடுத்தவங்க. இப்ப விவசாயத்தோட பால் மாடு வாங்கி கூட்டுறவு சங்கத்தில் நூறு பெண்களை ஈடுபடுத்தி இருக்காங்க. அவங்க அனுபவம் கேளுங்க.”

“வணக்கம்” என்று சரோ அவளைப் பார்த்துக் கை குவிக்கிறாள்.

“நூறு மாடுன்னா, எப்படிங்க?”

“அதான் தான்வா மகளிர் சங்கம்ன்னு ஒண்ணு வச்சிட்டோம். அதில் நூறு பெண்களுக்கு லோன்வாங்கி மாடு வாங்கினோம். பெண்களுக்கு இதில் உபரியாய் வருவாய் இருக்கு. லோன் அடைஞ்சு அதிகமாக வருவாய். மேலும் மாடுகள் விருத்தியாகுது. இப்ப சொசைட்டிக்கு பால் விட்டது போக கூடுதலாகக் கிடைக்குது. இதை எப்படித் தொழில் பண்ணலாம்னு யோசனை கேட்க வந்தேன்.”

செவந்தி வியந்து நிற்கிறாள்.

“ஏம்மா பவர் டிரில்லர் பற்றிக் கேட்டியே. பாக்டரிக்கு போய் பார்த்தாயா?” என்று சரோவிடம் அவர் கேட்கிறார்.

“அந்த மேடத்தை ஆபீசில் பார்த்தேன். ஆனால் பாக்டரிக்கு போகவில்லை. ரிசல்ட் வந்து பர்ஸ்ட் கிளாசில் பாஸ் பண்ணிட்டேன் மேடம்.”

கையில் வைத்திருக்கும் பையில் இருந்து பால்கோவாப் பெட்டியைத் திறந்து நீட்டுகிறாள்.

“வாழ்த்துக்கள். ரொம்ப சந்தோசம், சரோ.”

அந்தப் பெண்மணியிடமும் நீட்டுகிறாள். அவள் ஒரு துண்டை எடுத்துக் கொள்கிறாள். “நீயும் எடுத்துக் கொள்” என்று அந்தப் பெண்ணிடமும் நீட்டிவிட்டு பெட்டியை மேசைமீதே வைக்கிறாள்.