பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

கோடுகளும் கோலங்களும்

சின்னச்சின்ன நுணுக்கங்கள்... பெரிய லாபங்கள்.. வருக வருக... என்று ஆட்சியாளரையும் டேனிடா திட்ட அலுவலரையும் விரிவாக்கப் பணியாளரையும் வரவேற்கும் வாசகங்கள். காலையில் இருந்து மாநாடு நடைபெறுகிறது. வழக்கமான வரவேற்பு உரை, அலுவலர் ஆட்சியாளரின் வாழ்த்துக்கள் எல்லாம் முடிந்தாயிற்று. அரிமாசங்கத்தலைவி லாவண்யா அம்மாள், இந்த மாநாட்டுப் பெண்களுக்குப் பகலுணவாகச் சோற்றுப் பொட்டலம் வழங்க ஏற்பாடு செய்திருந்தார். அந்த அம்மையார் தாம் வரவேற்புக் குழுத் தலைவர். முன் வரிசையில் பல முன்னணிப் பெண்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்.

இவர்கள் எல்லோரும் பூமியுடனும் பெண்கள் முன்னனேற்றத்துடனும் தொடர்பு கொண்டவர்கள். கூட்டு முயற்சியில் நம்பிக்கை வைத்து ஊக்கியவர்கள்.

வானொலிக்காரர்கள் ஒரு புறம் இந்த நடவடிக்கைகளைப் பதிவு செய்கிறார்கள். சரோ... சரோ.. அங்கே நிற்கிறாள். உயரமாக ஒரு வெளிர் நீல சல்வார் அணிந்து குட்டையான முடியைச் சீவி ஒரு வளையத்தில் இறுக்கிக் கொண்டு நிற்கிறாள். எப்படி வளர்ந்து விட்டாள். தன்னம்பிக்கையின் வடிவாக நிற்கிறாள்.

கரும்பாக்கம் மகளிர் பால் உற்பத்திச் சங்கம் காண எப்படிப்பாடுபட்டு பெண்களைச் சேர்த்தாள். பங்குத் தொகை பிரித்து மூலதனம் திரட்டி முப்பத்தைந்து பேருக்கு பால் மாடு வாங்கி பால் உற்பத்தி தொடங்கி நடக்கிறது. நூறு மாடுகள் என் இலட்சியம் என்று நிற்கிறாள். யூரியா தெளித்து வைக்கோலுக்கு ஊட்டமேற்றும் வித்தை இப்போது பலன் கொடுக்கத் தொடங்கியிருக்கிறது.

“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்!” என்ற வாசகம் செவந்தியின் கண்களில் படுகிறது. முன் வரிசையில் அவள் பிற்பகல் நடவடிக்கைகளில் பங்கு பெறுபவளாக அமர்ந்திருக்கிறாள். ஆனால் ஏதோ கனவு உலகத்தில் இருப்பதுபோல் தோன்றுகிறது.