பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

205

இன்னும் பிற்பகல் விவாதங்கள் தொடங்கவில்லை. அறிவொளிக்காரர்களின் இசை நிகழ்ச்சி மேடையேறி இருக்கிறது. இந்த இளைஞர்கள் எல்லாம் சரோவின் தோழர்கள். 'டிரம்’ என்று சொல்லும் தாளம் கீ போர்டு கிட்டார் எல்லாம் செவந்திக்குப் புதுமையானவை.

சரோவும் இன்னும் மூன்று பெண்களும் சேர்ந்து பாடுகிறார்கள்.

பட்டா-படி கற்போம் பாட்டா-படி... கற்போம் பாட்டி-படி மாமா-படி என்று பல்லவியைச்சொல்லி அவர்கள் பாடப்பாட தாளங்களும் குரல்களுமாக மகிழ்ச்சி அலைகள் பரவுகின்றன. “கண்ணுக்கு மை அழகு. கட்டை விரலுக்கு அழகாகுமா? பெண்ணுக்கு கல்வி கொடு. பெருமையை தேடிக் கொள்ளு!” சாந்தி, ஜனாபாய், பாப்பம்மா, எல்லாரும் இந்த மாநாட்டுக்கு எத்தனை நாட்கள் பாடுபட்டிருக்கிறார்கள். இதோ பெரிய மேடம் உட்கார்ந்து பாட்டை அனுபவிக்கிறார். அவ்வப்போது ஒருங்கிணைந்த முன்னேற்றம் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். சரோ முனையவில்லை என்றால் இது சாத்தியமா என்று தோன்றுகிறது. கன்னியப்பனுக்குக் கட்டி வீட்டோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தது எத்தனை மடத்தனம் என்று தோன்றுகிறது.

கூடை நிறைய பழத்தில் ஓர் அழுகல் இருந்தால் மணம் இருக்காது. நாற்றம்தான் பரவும் என்ற கருத்தைத்தான் இதுவரை இவர்கள் வாழ்க்கையில் கற்றிருந்தார்கள். குறைகள் குற்றங்கள் ஆற்றாமைகள் புகார்கள். "புருசஞ் சொத்து அவ உள்பாடி ரவிக்கை போட்டுட்டு திரியறா” என்ற செய்தி எங்கோ யாரையோ பற்றிக் காற்றில் மிதந்து வரும். உடனே எல்லாப் பெண்களும் விதிமீறி கோடு தாண்டுபவர்கள் என்று கடித்துக் குதறுவார்கள். நாற்று நடும்போது பேசமாட்டார்கள். ஆனால், புளி கொட்டை எடுக்கும் போதோ, உளுந்து பருப்பு உடைத்துப் புடைக்கும் போதோ, இந்த மாதிரி அவதூறுகள் வேலையைச் சுவாரசியமாக்கும். படி தாண்டிப்