பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/208

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

கோடுகளும் கோலங்களும்

போன பெண்ணை வீட்டுல சேத்துப்பாங்களா? அது கழண்டு போனதுதா...?

“அதுக்குத்தான் ஆளாயி ஒரு வருசத்துக்குள்ள கேக்க வந்தவங்க கிட்டச்சாட்டி வுடணும்ங்கிறது?” என்பார்கள்.

இப்போது அந்தக் கருத்துக்கள் தகர்க்கப்பட்டிருக்கின்றன. கோடுகள் இன்று அழிக்கப்பட்டிருகின்றன.

பாட்டு நின்று, ஜனாபாய் மேடை மீதேறி மைக்கின் முன் நின்று பேசுவது கூடச் சிந்தையைக் கிளப்பவில்லை.

பெரிய மேடத்தை அவர்கள் மேடைக்கு அழைக்கிறார்கள். அவர் மறுக்கிறார். “நான் இங்கேயே உட்கார்ந்து நீங்கள் பேசுவதைக் கேட்பேன்.”

"கரும்பாக்கம் தான்வா மகளிர் அணி இப்போது மேடைக்கு வருகிறது. இவர்கள் குறுகிய காலத்தில் முன்னணிக்கு வந்துவிட்ட சாதனையாளர்கள். சோதனையில் சாதனை செய்து காட்டிய முன்னணிப் பெண்மணி செவந்தி இப்போது தன் அநுபவங்களைக் கூறுவார்.” செவந்திக்கு தன்னைத்தான் சொல்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள சிறிது நேரம் ஆகிறது.

“செவந்தி!”

சரோ ஒடிவந்து அவள் தோளைப் பற்றி உசுப்புகிறாள். “எல்லாம் நினைப்பிருகில்ல? நல்லாப் பேசு.”

செவந்தி மேடைக்கு ஏறுகையில் முழங்கால்கள் நடுங்குவனபோல ஒரு பிரமை.

“பேரன்புக்கும் மரியாதைக்கும் உரிய” என்று சொல்ல வேண்டும் என்று சரோ சொல்லிக் கொடுத்து சொல்லச் சொன்னதெல்லாம் சுத்தமாக நினைவில் வரவில்லை. புளிச்சோற்றின் மிளகாய் பெருங்காய் நெடிமட்டும் நெஞ்சில் நிற்பதாக உணருகிறாள்.

என்ன பேச...?

பெண்கள் மட்டுமில்லை... ஆண்கள்... ஒரமாக நிறைய பேர் நிற்கிறார்கள். பட்டாளத்தார் மீசையை முறுக்கிக்