பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

211

“ஏம்மா நாம கஷ்டப்பட்டு நெல்லு பயிர் பண்ணுறோம். அதை வித்தாத்தான் நமக்கு எல்லாத்துக்கும் காசு. நமக்கு எப்படி விலை கிடைக்கிது? மூட்டை முன்னூறு முன்னூத்தம்பதுன்னு வச்சிருக்காங்க. ஆனா அரிசியாக்கிட்டா அது கிலோ பத்து ரூபாய்க்கு மேல போகுது. சரி நாமே நெல்லக் காய வச்சு ஆறவச்சி அரிசியாக்கி விக்கலான்னா முடியிதா? உடனே களத்து மேட்டிலேயே வியாபாரிங்க நம்ம மூடையைச் சாதகமாக்கிக் குறைச்ச விலை நிர்ணயிக்கிறாங்க. நாம கடனை அப்பத்தான் உடனே அடைக்க முடியும். இல்லாட்டி வட்டி கட்டணும். சர்க்கார் விற்பனைக் கூடம் வச்சிருக்காங்க. ஆனா, இங்கே வெளியே இருக்கிற வியாபாரிங்கதான் அங்கேயும் விலையை கம்மியா நிர்ணயிக்கிறாங்க. யாருமே அதிக விலைன்னு ஏற்றாமல் பாத்துக்கறாங்க.”

செவந்தி இதே பிரச்னையை இவ்வளவு நன்றாகச் சொல்லியிருக்க முடியாது என்று நினைக்கிறாள்.

இப்படி வரிசையாக ஒவ்வொருவரும் வந்து பிரச்னைகள், அநுபவ பாடங்கள் என்று பேசுகிறார்கள்.

ஒரு பெண் சுற்றுப்புறச் சூழல் பற்றிப் பேசுகிறாள். குப்பையை, சாணி கூளங்களை அப்படியே மேடாகக் கொட்டுவதில்லையாம். எட்டடிக்கு ஆறடி பள்ளம் தோண்டி அதில் குப்பையும், கூளமும் அடுக்கடுக்காகப் போட்டு மண்புழு விட்டிருக்கிறார்களாம். ஊட்டச் சத்து மிகுந்த உரமாகிறதாம். அதை விதைக்கும் கொடுக்கிறாளாம். பால் மாடு பராமரிப்பு, அதன் பிரச்னைகள்...

ஒரு வயசு முதிர்ந்த உழைப்பாளிப் பெண் எழுந்து நிற்கிறாள். கீச்சுத் தொண்டையில் கேட்கிறாள்.

“ஏம்மா, பொண்டுவளா, எல்லாம் சரித்தா, இந்த ஆம்புளங்க சாராயம் குடிக்காம, ஒழுங்கா இருக்க எதனாலும் வழி சொல்லுவீங்களா?”

கொல்லென்று அமைதி படிகிறது. பிறகு மற்றவளைப் பார்ப்பதும், நமட்டுச் சிரிப்புச் சிரிப்பதுமாக மழுப்புகிறார்கள்.