பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

217

போயிட்டாங்க. நா அழச்சிட்டு வாரேன். நீங்க இனி இந்தச் சனியன் பக்கம் போறதில்லன்னு ஏங்கிட்ட சத்தியம் வுடுங்க...”

“அவ வரமாட்டாம்மா. நாங்க அத்தினி கொடும செஞ்சிருக்கோம். புள்ளயக் கொண்டு வந்து ஒரு சமயம்ன்னு விட்டப்ப என்ன செஞ்சோம். அத்த வெரட்டி அடிச்சோம். அவ மனசு எரிஞ்சி சாபமிட்டத எப்படி மறக்க முடியும்? முருகனுக்கு என்னமோ வராத நோவு வந்திருக்காம். சோறு தண்ணி இறங்காம குச்சியாப் போயிட்டானாம்.”

‘பாவம் ... பாவம் செஞ்சவங்க... அனுபவிக்கிறம்... யம்மா கண்ணு அவனுக்கு ஏதானும் ஆச்சின்னா அந்தப்புள்ள கழுத்து நிறைய தங்கமும் பட்டுமா லட்சணமா வந்து நின்னிச்சே அது கதி...” மார்பில் அறைந்து கொள்கிறார். கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது. செவந்தி திடுக்கிட்டுப் போகிறாள்.

“அப்பா அப்பா... அதெல்லாம் ஒண்னுமில்ல. முருகனுக்கு அப்படி ஒண்னுமில்ல. கம்மா சிகரெட் குடிக்கிறா. அது அல்சர் வந்திருக்கு. அதுக்கு ரொம்ப பவுரா அமெரிக்காவிலிருந்து மருந்து தருவிச்சி குடுக்கறாங்களாம். ஒண்ணுமே பயமில்லைப்பா...” என்று தேற்றுகிறாள்.

“செங்கண்ணு பொஞ்சாதி சொன்னாளாம். இப்ப இவ எதுக்கு வந்தா? கொம்பேறி மூக்கம் பாம்பு கடிச்சிட்டு மரத்து மேல ஏறி நின்னு செத்தவம் புகையிறானான்னு பாக்குமாம். அப்படி வந்து மீட்டிங்கி பேசுனாளாம். அவளப் பாம்பு புடுங்கன்னு சொல்றா, எங்கிட்டியே!”

“இந்தப் போக்கத்தவங்க பேச்ச நீங்க நம்புறீங்களப்பா? இத பாருங்க, முருகனுக்கு நல்லபடியாயிடும். அப்படில்லாம் நமக்கு வாராது. கோழி மிதிச்சிக் குஞ்சி சாவுமா? சின்னம்மா அப்படி நிச்சயம் நினைக்கறவங்க இல்ல...” என்று சமாதானம் செய்ய முயலுகிறாள்.

கரும்பாயி அம்மன் கோயில் புதுப்பிக்கப்படுகிறது. சித்திரை மாசத்தில் குட முழுக்குச் செய்ய வேண்டும் என்று ஊரில் எல்லோரும் கூடித் தீர்மானிக்கிறார்கள்.