பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220

கோடுகளும் கோலங்களும்

சுத்தமான தேன் கால் லிட்டர் வாங்கி அதில் அதைப் போடுங்க.. காலம வெறும் வயிற்றில் ஆறுதுண்டு இஞ்சியும் ஒரு ஸ்பூன் தேனும் சாப்பிடுங்க. சாராயம் யாரேனும் குடிச்சிட்டு வந்தால் கூடப் பிடிக்காது. காத தூரம் ஒடி வருவீங்க.”

ஊர் முழுதும் சாமியாரின் இந்த வைத்தியம் பற்றிப் பரவுகிறது. சரோ அவசரமாக மகளிர் சங்கத்தில் ஒரு கூட்டம் கூட்டுகிறாள். "சாமியார் பச்சிலை மருந்து கொடுக்கிறார். எல்லாரும் அவவ புருசன அண்ணன் தம்பி அப்பான்னு கூப்பிட்டு வாங்க...” என்று விளம்பரம் செய்கிறாள்.

பிறகு சாமியாரிடம் சென்று பணிகிறாள் "சாமி இந்த ஊரு சனங்கள் நல்லவர்கள். உழைப்பாளிகள். சாராயம் ஒன்னுதான் கெடுக்கிறது. ஆந்திரத்தில் பெண்கள் போராடினார்களாம். அது போல் இங்கு வராதான்னு ரொம்பவும் ஆசைப்பட்டேன். சாமி நீங்க இங்கேயே இருக்கணும். எங்க ஊருல ஒராள் கூட அந்தக் கண்ராவி பாட்டில இங்க வரவுடக்கூடாது. உங்களுக்கு நாங்க என்ன உதவின்னாலும் செய்யிறோம்.”

“இஞ்சி நார் இஞ்சிதான் கிடைக்கிறது. காஞ்சிபுரம் போயி சுத்தத் தேனும் இஞ்சியும் வாங்கிட்டு வந்தாங்க. ஏங்க்கா தண்ணி இருக்கயில் நாம ஏன் இஞ்சி மஞ்சா போடக்கூடாது.”

"லட்சுமியா சொல்கிறாள்? என் லட்சுமி கன்னியப்ப அவனுக்கு இந்தப் பழக்கம் உண்டா?”

லட்சுமி புருசனைக் காட்டிக் கொடுத்துவிட்டதை எண்ணி நாணத்தால் குனிகிறாள்.

"நெதியும் இல்லன்னாலும் என்னிக்கின்னாலும் குசியா இருக்கறச்ச வாங்கி ஊத்திக்கும். எங்க மாமா பட்டாளத்துல முன்ன குடிப்பாராம், ஆனா அங்கேந்து வந்த பிறகு அதும் குடிச்சு குடிச்சே புத்தி கெட்டு மகன் போன பிறகு வெறுத்துப்போனவர். மாமாக்குத் தெரிஞ்சி அவர் இங்க இருக்கும் போது இவருக்குப் பயம். அதான் சாமிக்கிட்ட கூட்டியாந்திட்டே” என்றாள்.