பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

கோடுகளும் கோலங்களும்

கொள்ள, ஓர் இயக்கம் போல் ஆட்களை அந்த இயக்கமே கொண்டு வருகிறது. சாமியார் பச்சிலை கொண்டு வருவதற்காக அடிக்கடி கண்ணப்பர் மலைக்குப் போக வேண்டியிருக்கிறது.

"பத்திரிகை ரேடியோ பேட்டி எதுவும் வரக்கூடாது. இது வியாபாரம் இல்ல. உள் மனசோடு குடியை விட்டு நல்ல மனிதராக வேண்டும் என்ற உறுதி இருந்தாலே இங்கு வரவேண்டும்...” என்று சரோவுக்கும் அவள் சகாக்களுக்கும் அவர் எச்சரித்திருக்கிறார்.

சரவணன் படித்து ஊன்றும் வரையிலும் சரோ கல்யாணம் என்று கட்டிக் கொண்டு இடம் பெயர்ந்து போகாமல் இருக்க வேண்டும் என்ற உள்ளுர வேண்டிக் கொள்கிறாள் செவந்தி.

நிறைய வெளி உலகில் பழகுவதனால், கீழ் மட்டத்தில், இருந்து மேல் மட்டம் வரையிலும் ஒரு திறந்த மனதுடன் தொடர்பு கொள்வதால் சரோ ஒர் அச்சமற்ற துணிவுடன் தலையெடுத்திருப்பது செவந்திக்குப் புரிகிறது.

பழைய கோடுகளை அழிக்கிறோம் என்ற உணர்வில்லாமலேயே அவை அழிந்து போனதைக் காண்கிறாள். தெருவில் இருக்கும் இளம் குருத்துகள், சரோ அக்கா போலப் படிப்போம் என்று ஆதரிசம் கொள்ளும்படி அவள் முன்னோடியாக இருக்கிறாள். அவள் நிச்சயமாக பண்ட பாத்திரம் தட்சணை என்று பெண்மக்களை விட்டுக் கிடுக்கிப்பிடி போட அனுமதிக்க மாட்டாள். மேலும் அவள் மனதுக்குப் பிடித்தவன் என்று வரும் போது அவன் அவள் சுதந்தரங்களைக் கட்டுப் படுத்தாதவனாகத்தான் இருப்பான். அவன் இவர்கள் சாதி சமூகத்தைச் சாராமலிருந்து இருவரும் விரும்பினால் இவர்கள் முட்டுக்கட்டை போடக்கூடாது.

இதெல்லாம் சாத்தியமில்லை என்று ஒரு புறமும் சாத்தியமாகும், அவள் நல்லது கெட்டது தரம் பிரிக்கும் பக்குவம் பெற்றிருக்கிறாள் என்ற தைரியமும் அவள் மனதில் அவ்வப்போது தோன்றாமல் இல்லை.

ஒரு நாள் ராமையா சரோவுக்கு ஒரு நல்ல வரன் இருப்பதாக வந்து சொன்னார்.