பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

225

கன்னியப்பனின் ஆயாவைப்போல் திருந்தாத சன்மங்கள். தெருக்காரர்.அவர்களைப் பற்றிப் பேசாமலிருப்பார்களா?

வெறும் வாயையே மெல்லுபவர் ஆயிற்றே?

ஆனாலும் சரோவின் வாய்க்கும் கண்டிப்புக்கும் சிறிது பலன் இருக்கத்தான் செய்கிறது.

“சரோ, விவசாயம் பால் சொசைட்டி இதோட சரியா? படிச்ச படிப்புக்கு மேலே திட்டம் உண்டா” என்று முருகன் கேட்கிறான்.

“இருக்கு மாமா பவர்டில்லர் வாங்கணும். விவசாயம் பூரா எங் கையில்” என்கிறாள் உற்சாகமாக...

“உன்னைப் போல் மெக்கானிக்கல் லைன் படிச்ச பையனுக்கு பேப்பரில் விளம்பரம் செய்வோம். இரண்டு பேருமாக சேர்ந்து ஏதேனும் தொழில் ஆரம்பிக்கலாம்.”

"மாப்பிள்ளைக்குப் பேப்பரில் விளம்பரமா?” என்று செவந்தி மலைக்கிறாள். காலம் எவ்வளவு மாறிவிட்டது!

அன்று குடமுழுக்கு விழா. கோயில் வளைவே மக்கள் கடலாகக் காட்சியளிக்கிறது. ஒரு புறம் தீ வளர்த்து வேள்வி நடக்கிறது.

ஊரின் பெரிய தலைகள், வாணிபம் செய்வோர், உழைப்பாளிகள்... பெண்கள், முதியோர், குழந்தைகள் என்று காலையிலேயே எல்லோரும் குழுமியிருக்கின்றனர்.

பந்தல் போதாமல், மஞ்சளும் நீலமும் சிவப்புமாகப் பட்டை போட்ட சாமியானா என்ற நிழல் வசதியும் செய்திருக்கிறார்கள். செவந்தியின் குடும்பத்தினர் அதிகாலையிலேயே நீராடித் தூய்மை பெற்று, தேங்காய் பழம், பூ வெற்றிலைப் பாக்கு கர்ப்பூரம் ஆகிய பூசனைப் பொருட்களுடன் கோயில் வளைவுக்கு வந்து விட்டார்கள். ஒலி பெருக்கி பக்திப்பாடல்களை இடைவிடாமல் ஒலி பெருக்கிக்கொண்டிருக்கிறது.